ரிஷாட் மற்றும் முஸ்லிம் சகோதரர்களின் விடுதலைக்கா ன் ஆர்ப்பாட்டங்கள் அரசை ஆத்திரமூட்டலாம்
பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக இப்புனித றமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
சகோதரரர் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு ஏட்டிக்குப் போட்டியாக முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளாக அமைந்து விடலாம் என்று என்னால் உணர முடிகிறது. சிலவேளை உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியபடாமல், எமது சகோதரர்களான ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஹஜ்ஜுல் அக்பர் மற்றும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தொடர்ந்தும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் போன்று நிரந்தரமாக சிறைகளிலேயே அடைத்து வைக்கப்படலாம்.
ஆகையினால், இந்த அநியாயமான செயற்பாட்டை இறைவனிடம் பாரம்சாட்டி, அவனது உதவியை நாடுவதே இவர்களது விடுதலைக்கு உதவும் என இஸ்லாமியன் என்ற ரீதியில் நான் திடமாக நம்புகின்றேன்.
தற்போது புனித றமழான் மாதத்தின் இறுதிப் பத்தை அடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், இறைவன் கீழ் வானத்திற்கு வந்து எமது துஆக்களை அங்கீகரிக்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கின்ற முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் எமது சகோதரர்களின் விடுதலைக்காக பிரார்த்திக்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுதலாகும்.
இந்த இறுதிப்பத்தில் புனித நோன்பை நோற்றவர்களாக ஐவேளைத் தொழுகைகள், தராவிஹ் மற்றும் கியாமுல் லைல் எனும் இரவு நேரத் தொழுகைகள், இப்தார் மற்றும் ஸஹர் என்று ஏதாவது ஒரு வேளையில் எமது துஆக்களின்போது இந்த சகோதரர்களுக்காகவும் இறைவனிடம் மன்றாடுவோம். புனித மக்காவில் இஹ்திகாப் எனும் உயர்ந்த இபாதத்தில் இருப்போரும் விசேடமாக பிரார்த்தியுங்கள் என அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.
முஸ்லிம்களின் துஆ எனும் பிரார்த்தனை மிகவும் சக்திமிக்கதாகும். அதிலும் அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் துஆக்கள் எவ்வித திரையுமின்றி இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அல்குர்ஆன், ஹதீஸ் எடுத்தியம்புகின்றன. அவ்வாறு எமது துஆக்களும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமானால், நிச்சயமாக இன்று நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை இலகுவாக வெற்றி கொள்ள முடியும். இறைவன் நினைத்தால் இரவோடிரவாக ஒரு கணப்பொழுதில் நிலைமைகளை தலைகீழாக மாற்றி விட முடியும் என்பதே எமது இறை நம்பிக்கையாகும்.
இறை தூதர்களின் வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் இறைவன் புறத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அபார வெற்றிகளை கண்டு கொள்ளலாம். இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் பல போர் முனைகளில் படைபலம் குறைவாக இருந்த நிலையிலும் இறை சக்தியினால் இஸ்லாத்திற்கு பாரிய வெற்றிகள் கிடைக்கப்பெற்றமை வரலாறாகும். இந்த யதார்த்தத்தை உணர்ந்து முஸ்லிம்கள் அனைவரும் துஆ எனும் இறை சக்தியை இந்த றமழான் இறுதிப்பத்தில் பயன்படுத்திக் கொள்வோம்.
(அஸ்லம் எஸ்.மௌலானா)