வெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு
வெளிநாட்டினரை தனிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை மூடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு சார்ந்த வியாபார நிறுவனங்கள் சில பணம் பெற்றுக்கொண்டு இந்தியர்களை இலங்கைக்கு அழைத்து வந்து இலங்கையில் தனிமைப்படுத்துலுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிப்பதாக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர். அதற்கு அரசு சார்பு அமைச்சர்கள் அப்படி ஒரு விடயம் நடைபெறவில்லை என மறுதலித்திருந்தனர். அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹெலியா ரம்புக்வெல்ல இந்த குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று கூறினார்.
இருப்பினும், நாட்டில் வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரனதுங்க சமீபத்தில் ஒப்புக்கொண்டார்.
இதுவும் நேற்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. கவிந்த ஜெயவர்தன, ஜாதிக ஜன பலவேக எம்.பி. விஜித ஹெரத் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
நேற்று இரவு (04) ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்குத் தெரியாமல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறினார். இருப்பினும், அதை அறிந்தவுடன் அதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.