ரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக் ‘கொரோனா’ சபாநாயகருக்கு சி.ஐ.டி. அறிவிப்பு.
குற்றப்புலனாய்வு பிரிவில் ஒரு சிலருக்கும், ரிஷாத் பதியுதீன் எம்.பி.யின் பாதுகாவல் அதிகாரிகள் ஒரு சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிக்க முடியாதுள்ளது எனக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தால் அவரை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
எனினும், ரிஷாத் பதியுதீன் சபைக்கு அழைத்து வரப்படவில்லை .இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். அது தொடர்பில் ஆராய்வதாக சபாநாயகர் கூறினார்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒரு சிலருக்கும், ரிஷாத் பதியுதீன் எம்.பி.யின் பாதுகாவல் அதிகாரிகள் ஒரு சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிக்க முடியாதுள்ளது எனக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர் என சபாநாயகர் தரப்பு கூறியுள்ளது.