கிபிர் விமானங்களை புதுப்பிப்பது அவசியமா? சபையில் ஜனாதிபதியிடம் சஜித் கேள்வி.
தற்போது நாடு முகங்கொடுக்கும் கொரோனா நெருக்கடி நிலைமையில் கிபிர் விமானங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை அவசியமா? என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் கேள்வி எழுப்பினார்.
ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து கிபிர் விமானங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிபிர் விமானங்களைப் புதுப்பிக்க அரசு செலவிடவுள்ளது எனக் கூறப்படும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், அதேபோன்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள உடற்பயிற்சி கூடங்களுக்குச் செலவிடப்படவுள்ள 650 மில்லியன் ரூபாவையும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குச் செலவிடுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிதிகள் மூலம் கொரோனாத் தடுப்பு மருந்து, மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், ஒட்ஸிசன், தடுப்பூசிகள், போன்றவற்றை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, “உடற்பயிற்சிக் கூடங்களுக்கான நிதி கொரோனா நிதியிலிருந்து பெறப்படவில்லை. அது வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி” என்று தெரிவித்தார்.