இந்தியாவை விட இலங்கையில் தொற்றாளர்கள் விகிதம் அதிகம்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை
இந்தியாவை விட இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகின்றவர்களின் விகிதம் அதிகம் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் தற்போது நாளாந்தம் 1500 இற்கும் அதிகமான கொரோன நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள்.
இந்தியாவில் நாளாந்தம் 3 இலட்சம் அளவிலானோர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகின்ற போதும், இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் இலங்கையின் மக்கள் தொகை என்பவற்றை ஒப்பிடும்போது, இலங்கையில் கொரோனத் தொற்றுக்கு ஆளாகின்றவர்களின் விகிதம் அதிகமாக இருக்கின்றது.
அதேநேரம், கொரோன நோயாளர்களுக்கான சிகிச்சையளிப்பதற்கான கட்டில்களுக்கு எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
தற்போது வைத்தியசாலைகளின் கொள்ளளவைக் காட்டிலும், அதிகளவான எண்ணிக்கையில் கொரோனா நோயாளர்கள் இருக்கின்றனர். இது எதிர்காலத்தில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும்” – என்றார்.