வேறு எந்தவிதமான திட்டங்களுக்கும் கொரோனா நிதி பயன்படுத்தப்படாது சபையில் நாமல் எம்.பி. உறுதி.
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தத் திட்டங்களுக்கும் அரசு பயன்படுத்தாது என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
கொரோனாத் தடுப்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் நிதி அமைச்சர் ஒதுக்கியுள்ளார் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது கூறினார்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள கொள்கலன் உடற்பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் ரூபா நிதியைக் கொரோனாத் தடுப்புக்குப் பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியே இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவுவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியிருந்தது.
வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நாடளாவிய ரீதியில் அமைப்பதற்காக 625 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான திட்டத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.