முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்.. கண்ணீர் விட்ட துர்கா..
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் காலை 9 மணிக்குத் தமிழக முதல்வராகச் சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.
அவருடன் சேர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றனர். கொரோனா காலம் என்பதால் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்தே காணுங்கள். உங்களது உடல் நலம் முக்கியம்” என திமுக தொண்டர்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாளை மாலை 4 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டமும் அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
முதல்வராக முக ஸ்டாலின் பதவிப்பிரமாணம் செய்தபோது அவரது மனைவி, துர்கா ஸ்டாலின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
1996 ம் ஆண்டுக்கு பிறகு திமுக முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்று உள்ளது. அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் பலம் தேவை இல்லாமல் அறுதி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது திமுக.
இந்த நிலையில்தான் இன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. ஸ்டாலின் உள்ளிட்ட 34 பேர் இதில் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர். முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.. என்று கூறி ஸ்டாலின் பதவியேற்ற போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
கண்ணீர் விட்ட துர்கா ஸ்டாலின்
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் விழாவில் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மற்றும் பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தாரும் பங்கேற்றிருந்தனர். பதவியேற்புக்கு முன்பாக, அவர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார் ஸ்டாலின். இந்த நிலையில், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் விஐபிகள் வரிசையில் உட்கார்ந்து இருந்த துர்கா ஸ்டாலின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவர் தன் கைகளால் கண்களை துடைத்துக் கொண்டார். ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்பதால், அவரது மனைவி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்ததைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கடவுள் மறுப்பாளர்களாக அறியப்பட்டாலும் துர்கா ஸ்டாலின் மிகுந்த தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர். பல்வேறு கோவில்களுக்கும் சென்று அவர் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்தார். ஸ்டாலின் எப்படியாவது தமிழக முதல்வர் ஆகிவிட வேண்டும் என்பது துர்கா ஸ்டாலின் வேண்டுதல்களில் ஈடுபடுகிறார் என்று செய்திகள் பரப்பப்படும் அளவுக்கு அவர் அவ்வப்போது வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும் துர்கா கண்களிலிருந்து அவரையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை பார்க்கமுடிந்தது.
ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில், திமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டாம் என்றும், நேரலை ஒளிபரப்பில் பதவி ஏற்பு விழாவை பார்க்குமாறும் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார். பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தக்க சமூக இடைவெளியை கடைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.