சகல சவால்களையும் முறியடித்தே தீருவோம் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் மஹிந்த

“எமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம்.”
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
“சர்வதேச ரீதியான சவால், உள்நாட்டு அரசியல் சவால், கொரோனாப் பெருந்தொற்று சவால், பொருளாதார ரீதியான சவால் எனப் பல சவால்கள் எம்மைச் சூழ்ந்துள்ளன. அனைத்துச் சவால்களையும் முறியடித்து நாட்டு மக்களுடன் இணைந்து பயணிப்பதில் எமது அரசு உறுதியாக உள்ளது” எனவும் இந்தப் பேச்சின்போது பிரதமர் மஹிந்த மேலும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் நாட்டின் கொரோனாத் தொற்று நிலைமை மற்றும் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்குப் பிரதமர் விளக்கினார்.