முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி : மாவட்ட அரசாங்க அதிபர்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 பேருக்கு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 101 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போதைய கொவிட் 19 நிலமைகள் தொடர்பில் இன்று(07) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
மாங்குளம் வைத்தியாசாலையில் சிற்றூழியராக பணியாற்றி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய 12 பேர் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாங்குளம் மருத்துவமனையில் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் சிகிச்சை நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூழியர் ஒருவருக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. மாஞ்சோலை மருத்துவமனையில் தொற்று பாதுகாப்பு தொடர்பில் பிராந்திய சுகாதார பணிமனையினர் மற்றும் வைத்திய அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார்கள்.
கடந்த காலங்களை விட மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது பரவும் வைரஸ் அதிக வீரியம் கொண்டதாகவிருப்பதுடன் இது இளைஞர் மற்றும் சிறுவர்களை அதிகம் தாக்குகிறது. எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்களுக்கான அறிவித்தலாக அநாவசியமாக வீதிகளில் செல்லவேண்டாம். அத்தியவசியமாக வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்து, கைகளைக் கழுவி, தொற்று நீக்கல்களை மேற்கொண்டு சுகாதார நடவடிக்கையினை பின்பற்ற வேண்டும்.
கடந்த காலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்திருந்தாலும் தற்போது அதிகரித்து வருகின்றது. எனவே மக்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவும். ஒன்று கூடல்களை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.