வற்றாப்பளை பொங்கல் உற்சவ நிகழ்வில் பொதுமக்களுக்கு தடை .
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவ நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் பூசை வழிபாடுகள் சாதாரண பூசையாகவே நடைபெறும் என மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் தெரிவித்தார். குறித்த ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பாக இன்று(07)ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும் போது மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்:
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பாக இன்று(07) சுகாதார துறையினர், இராணுவத்தினர், பொலிஸ், பிரதேச சபை ஆகியோருடன் கலந்துரையாடி முடிவுகளை எடுத்துள்ளோம்.
அதனடிப்படையில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய ஆலய பூசகர் மற்றும் குறிப்பிட்ட ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுடன் விசேட பூசைகளின்றி சாதாரண பூசை வழிபாடாக அமையும்.
இதன்போது பக்தர்களின் உள்வருகை மற்றும் நேர்த்திக் கடன்கள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவுடன் கலந்தாலோசித்து முன்னெடுத்துள்ளோம். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் மிக அவசியமானது என தெரிவித்தார்.