இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதி.

இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்கா அதிக பாதிப்புகளை சந்தித்தது. அந்த சமயத்தில் இந்திய அரசு சார்பில், அமெரிக்காவிற்கு பல்வேறு மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.

இதனிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவிற்கு கொரோனா நிவாரணம் வழங்குவது குறித்து வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது

இந்தியாவின் நலன் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவில் நிலைமை மோசமடைய துவங்கியதும், எங்கள் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமருடன் பேசினார். அதை தொடர்ந்து ஏப்ரல் 30 ஆம் திகதிக்குள் அமெரிக்க இராணுவம் மற்றும் பொதுமக்கள் இந்தியாவிற்கு தேவையான நிவாரணங்களை அனுப்ப ஆரம்பித்தனர்.

அதே சமயம் அறிவுசார் சொத்து விதிகளில் இருந்து கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை விலக்கி வைக்கும் நிலைப்பாட்டிற்கு, அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு விரைவில் தடுப்பூசிகளை செலுத்த முடியும்.

அமெரிக்காவிற்கு தேவையான காலத்தில் இந்தியா உதவியது. தற்போது இந்தியாவின் நண்பன் என்ற முறையில் அமெரிக்கா உதவிகளை செய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்குள் 6 விமானங்களில் உதவிப்பொருட்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது.” என அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.