மகாவலி அதிகார சபை விவகாரத்தில் தமிழருக்கு ஒருபோதும் அநீதி இழைக்கமாட்டோம்!
மகாவலி அதிகார சபை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
முல்லைத்தீவில் மகாவலி அதிகார சபைக்கு எட்டு கிராமசேவகர் பிரிவுகள் கையளிக்கப்படுவது பற்றியும், கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச சபை தரமிறக்கப்பட்டது பற்றியும் சமல் ராஜபக்சவுடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் மகாவலி அதிகார சபை பகிர்ந்தளிப்பது தொடர்பில் தமிழ்ப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வாறு கையளிப்பதைத் தடைசெய்வதாக அறிவித்திருந்தார்.
இதற்கு மாறாக நாமல் ராஜபக்ச அப் பிரதேசங்களை மகாவலி அதிகார சபையிடம் கையளிக்க வருகின்றார் என்ற செய்திகள் வந்திருப்பது பற்றி அமைச்சருடன் பேசியபோது, அவ்வாறு நடைபெறாது என வாக்குறுதி வழங்கியுள்ளார்.
அமைச்சர் குறிப்பிட்டதாவது அப்பிரதேசங்களில் நவீன முறையில் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காகவே முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது நான் எமது மக்கள் அப்பிரதேசங்களில் மகாவலி அபிவிருத்திச் சபை நீர்ப்பாசன நடவடிக்கைகளின்போது தென்னிலங்கையிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றி அப்பிரதேசங்களின் இனக்குடிப்பரம்பலைச் சீர்குலைக்க முயற்சிக்கப்படும் என்ற மக்களின் அச்சத்தைக் குறிப்பிட்டேன்.
அமைச்சர் அவ்வாறு நடைபெற, தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்படாது என்றும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் இவ்விடயம் பற்றிப் பேசித் தீர்மானிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
கல்முனை வடக்கு தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் முழுமையான தரமுள்ள பிரதேச செயலகம் நிறுவ கடந்த அரசுக் காலத்தில் அமைச்சரவைப் பத்திரமே தயாரிக்கப்பட்டது. இதற்காக நீண்டகாலமாகவே கல்முனைத் தமிழ் மக்கள் போராடி வருகிறார்கள். இப்போது ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் அமைச்சர் என்ற வகையில் அண்மையில் முறையிடடுள்ளனர் என மாவை சேனாதிராஜா அமைச்சரிடம் பேசியபோது, அவ்விடயத்திலும் தமிழ், முஸ்லிம் பிரதிகளுடன் பேசி நீதியான தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சமல் ராஐபக்ச உறுதிபடத் தெரிவித்தார்” – என்றார்.