முஸ்லிம்களுடைய உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடங்களை ஆய்வு செய்தனர்.
கண்டி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களுடைய உடல்களை கண்டி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடங்களை சம்பந்தப்பட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று யட்டிநுவர பிரதே சபையின் உறுப்பினர் வசீர் முக்தார் தெரிவித்தார்.
அவர் தொடந்து கருத்து தெரிவிக்கையில்
அந்த வகையில் ஜம்மிய்யதுல் உலமா சபையினால் பரிந்துரை செய்யப்பட்ட தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள கும்புக்கந்துற மையவாடி, அக்குறணை தாய் பள்ளக்கு உரித்தான ஸாஹிராதெனியவில் அமைந்துள்ள மையவாடி, யட்டிநுவர பிரதேசத்திலுள்ள தெஹிஅங்கை இஸ்மததஹேன மையவாடி தொழிநுட்ப குழுவினர் குறித்த பகுதியில் உள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு பரிசீலனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நிஹால் வீரசூர்யாவிடம் பிரதேச சபை உறுப்பினர் வசீர் முக்தார் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மத்திய மாகாண ஆளுநர், மத்திய மாகாண ஆணையாளர், மற்றும் மத்திய மாகாண பிரதான செயலாளர் ஆகியோர் இது சம்பந்தமாக ஆராய்து கண்டி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்வதற்கான தகுந்த பொருத்தமான இடங்களை பரிசீலனை செய்வதற்காக மத்திய மாகாண உதவி செயலாளர் திருமதி மஞ்சுளா அவர்களின் தலைமையின் கீழ் ஒரு தொழில் நுட்ப குழுவொன்றை நியமித்துள்ளனர்.
இந்தக் குழுவில் சுற்றாடல் திணைக்களம், நீர் வளங்கள் திணைக்களம், மத்திய மாகாண சுகாதார அமைச்சு ஆகிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்
கண்டி மாவட்ட ஜமியத்துல் உலமா கண்டி மாவட்டத்தின் பிரதான முஸ்லிம் ஊர்களில் உள்ள பள்ளி நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசியினை நடத்தி சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அவர்களினால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டல்களுக்கு அமைய கோவிட் தொற்றினால் உயிரிழந்த உடல்ககளை நல்லடக்கம் செய்வதற்காக பொருத்தமான சில குறிப்பிட்ட ஊர்களில் அமைந்திருக்கும் மையவாடிகளையும் பரிந்துரை செய்து இருந்தார். இதற்கமைய இன்று 07ம் திகதி மே மாதம் வெள்ளிக்கிழமை தொழிநுட்ப குழுவினால் குறித்த பகுதியில் உள்ள இடங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த இடம் பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் வாழக்கூடிய பிரதேசமாகவும் , நீர்நிலைகளில் இருந்து குறைந்தபட்சம் 350 மீற்றர் தொலைவில் அமைந்து இருக்கக்கூடிய இடமாகவும் ஒரு ஏக்கர் பரப்பளவு குறையாமல் உள்ள இடமாகவும் மற்றும் வாகனங்கள் இலகுவாக செல்லக்கூடிய பாதை வசதிகள் உள்ள இடமாகவும் கவனத்திற் கொண்டு தெரிவு செய்யப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்துக்குள் கொரோனா தொற்றினால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்ய விரும்பும் வேறு இடங்கள் இருப்பின் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.