தமிழ் எம்.பிக்களுக்கு சிங்களத்தில் கடிதமா? – சுமந்திரன் கடும் விசனம்.
நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் வழங்கப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அதிகாரிகள் மொழிக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் குறைவான அணுகுமுறையைக் கையாள்கின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்தக் கோரி, சுமந்திரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், அவரது பிரேரணை சுகாதார அமைச்சுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கும் கடிதம் அவருக்கு சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் உறுப்பினர்களுக்கு சிங்கள மொழியில் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. நாம் இந்தப் பிரச்சினையை எத்தனை தடவைகள் முன்வைத்துள்ளோம்?
நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சுற்றறிக்கைகளும் சிங்களத்தில் மட்டுமே வழங்கப்படுகின்றன.
அரசமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரு மொழிக் கொள்கையை, குறைந்த பட்சம் நாடாளுமன்றத்திலேனும் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான உரிமை மீறல்கள் தொடர்வது ஏன் கவனிக்கப்படுவதில்லை?” என்று சுமந்திரன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.