நாயாட்டு ( Nayattu ) மலையாள திரைப்பட பார்வை : ஜோ
2021 ல் வெளிவந்த மலையாள திரைப்படம் நாயாட்டு (Hunting) . நாயாட்டு என்றால் வேட்டையாடுதல்.
அரசியல்வாதிகள், தேர்தல் , தலித் ஓட்டு அரசியல், மேல் அதிகாரிகளிடம் சிக்கி வேட்டையாடப்படும் போலிஸின் கையாலாகாத நிலை ஆகியவற்றை சொல்லிய திரைப்படம் நாயாட்டு.
மலையாளத்திரை உலகில் இருந்து வெகு நாட்களாக ஒதுங்கி இருந்த குஞ்சாக்கா போபன்,புது நடிகை நிமிஷா, ஜோஜி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேல் அதிகாரியின் கட்டளைக்கு உட்பட்டு, இல்லாத வழக்கை ஜோடித்து ஒரு நிரபராதியை ஜெயிலில் தள்ளும் போலிஸின் பணியில் இருந்து ஆரம்பமாகிறது திரைப்படம்.
அதே கர்மா, போலிஸிற்கும் திரும்பி வருகிறது. எதிர்பாராது நடந்த விபத்தில் போலீசார் பயணித்த ஒரு வாகனத்தில் மோதுண்ட ஒருவர் மரணித்து விட, மூன்று காவலர்களும் குற்றவாளிகளாக ஆகிவிடுகின்றனர்.
காவல்துறையால் தங்களுக்கு நீதி பெற்று தர இயலாது என்ற சூழலில் குற்றவாளியான 3 போலீசார் , அங்கிருந்து தப்பி ஓட ஆரம்பிக்க கதை விருவிறுப்பாகிறது.
போலீசாரின் தேடலில் இருந்து தப்பி பிழைத்து மூணார் வந்து சேர்ந்து, ஒரு தமிழரின் உதவியுடன் தலைமறைவாக அவர்கள் ஒரு மலைச் சாரலில் தங்க, தேடுதல் வேட்டையில் அவர்களை பின் தொடரும் போலிஸ் கண்ணில் அவர்கள் சிக்கி விடுகின்றனர். அதில் ஒரு போலிஸ்காரர் தற்கொலை செய்து கொள்ள, மற்ற இருவர் கைது செய்யப்படுவதோடு , ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலுக்கு செல்கின்றனர்.
தர்க்க ரீதியாக பல பிழைகள் உள்ளது. பல வழக்குகளை கையாண்ட காவலர் தலைமையில் மூவருமாக தப்பித்து செல்லும் போது தங்கள் உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கு கைபேசியில் உரையாடி தங்களின் மறைவிடத்தை தெரிவித்து, போலிஸில் மாட்டிக்கொள்கின்றனர். அதே போல் மரண வாக்கு மூலத்தை கைபேசியில் எடுத்த போலிஸ் தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு அனுப்பவில்லையாம். அந்த சான்றை போலிஸ் பிற்பாடு அழித்து விட்டு வழக்கின் போக்கை மாற்றுகிறார்கள்.
கடைசி காட்சியில் தேர்தல்கள் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு எந்த மாற்றத்தையும் கொண்டு வருவதில்லை. கடைநிலை போலிஸ் பெண்ணும் உயர்நிலை போலிஸ் பெண்ணும் ஒரு காட்சியில் ஒவ்வொருவருக்கொருவர் பார்த்துக்கொள்வார்கள். ஒரு பெண்னால் கூட இன்னொரு பெண்ணை காப்பாற்ற இயலாத இயலாமையை அந்த காட்சி சொல்கிறது.
கடைநிலை பெண் போலிஸ் ; நேர்மை நியாயம் என்று கூறி தங்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தாலும் பறவாயில்லை பொய் கூறமாட்டோம் என ஜெயிலுக்கு போகிறார். உயர் நிலை பெண் போலிஸ் அதிகாரி ஆண்களை போன்றே தலை மயிரை கத்திரித்து ஆண்களை போன்றே சிகரட் இழுத்து, ஆண்களுடன் குடித்து ,அதே அதிகார ஆசையுடன் ஆண்களுடன் சேர்ந்து ஒரு பொய் கதையை கட்டமைத்து இருவர் ஜெயிலுக்கு போகவும் காரணமாக செயல்படுகிறார்.
ஷாஹி கபீர் , தமிழ்த் திரைப்படம் விசாரணையில் இருந்து கிடைக்கப்பட்ட ஊக்கத்தில் இருந்து திரைக்கதையை எழுதியதாக குறிப்பிட்டு உள்ளார்.
திரைக்கதை சிறப்பாக கதையை நகத்துகின்றது. ஒரு மணி நேரம் போவதே தெரியவில்லை. ஒன்றுக்கு மேல் அடுத்த சஸ்பென்ஸ் கதையை இலகுவாக நகத்துகிறது.
திரைப்படம் இயக்கியவர் மார்ட்டின் ப்ராக்காடு. ஒவ்வொரு காட்சியின் அடர்த்தியும் அர்த்தச்செறிவும் நிறைந்துள்ளது. விறுவிறுப்பான காட்சித்தொகுப்பு , திரைக்கதை , இயக்கம் யாவும் தரமாக சுவாரசியமாகவும் உள்ளது.
இத்திரைப்படத்தில் நடித்த அனில் நெடுமங்காடு அகால மரணம் அடைந்தது துயரமாகும்.
கதையின் பின்புலமாக மூணாறு வருவதால் மேற்கு தொடர்ச்சிமலையின் அத்துணை இயற்கை காட்சிகளையும் , அழகையும் படம் பிடித்து தந்த திரைப்படம் இது எனலாம்.
இத்தனைக்கும் மத்தியில் முக்கியமான ஒரு திரைவசனத்தில் ”மூணாறில் காட்டுக்குள் நிற்கிறோம். தமிழர்கள் 500 குடும்பங்கள் இங்கு உண்டு. அவர்கள் கஞ்சா பயிரிட்டு வருவதாக திரைப்படத்தில் சொல்லப்பட்டது மூணாறின் பூர்வ குடிகளான தமிழர்களை அவமதிப்பதேயாகும். அது பெரும் தகவல் பிழையும் கூட.
கேரளாவில் மூணார் மற்றும் மேற்கு தொடற்சி அடிவாரத்தில் இடுக்கு தங்கம் என்ற பெயரில் கஞ்சா பயிறிடுவதும் இடுக்கி தங்கம் அல்லது நீலச்சடயன் என்ற பெயர்களில் ஆசிய சந்தையில் விரும்பி வாங்கும் பொருளாகும் இது.
இதன் கிளைகள் ஆந்திரா, கர்னாடகா, ஒரீஸா போன்ற மாநிலங்கள் வரை விரிந்து கிடப்பது ஊடக செய்தியே. ஆனால் தமிழர்கள் பயிரிடுவதாக சொல்லியுள்ளது ஒரு கட்டமைக்கப்பட்ட பொய்யாகவே உள்ளது. இது ஒரு இனமக்கள் மேல் செலுத்தும் அநியாயம் மட்டுமல்ல அநீதியும் ஆகும்.
– ஜோ