முழு நாட்டையும் முடக்க வேண்டிய அவசியம் இன்னும் ஏற்படவில்லை! – இப்படிக் கூறுகின்றார் அமைச்சர் வாசு
கொரோனாத் தொற்றால் முழு நாட்டையும் முடக்க வேண்டிய அவசியம் இன்னும் ஏற்படவில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2020 மார்ச் மாதத்தில் நாட்டை முடக்கியதன் மூலம் நாம் அனுபவத்தைப் பெற்றுள்ளோம். எனினும், விவசாயம் மற்றும் பெருந்தோட்டத் தொழில் போன்ற நமது அத்தியாவசியத் தொழில்களை நிறுத்தாது முன்னெடுத்தோம்.
நாட்டின் தொற்றுநோய் பரவலுக்கு ஏற்ப பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
தற்போது அரசு அதனை வெற்றிகரமாக செய்து வருகின்றது. கொரோனாத் தொற்று அதிகமான பகுதிகள் அடையாளம் கண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய தனிமைப்படுத்தல்களை அரசு முன்னெடுத்துள்ளது.
எனவே, அவசியமான பகுதிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு தனிமைப்படுத்தும் பகுதிகளில் நோய்த் தொற்று குறையும்போது அவை விடுவிக்கப்படுகின்றன.
மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதன் போது நாடு முழுவதும் முடக்கப்பட்டால் அவர்கள் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்வார்கள்.
அதன்படி, மருத்துவ மற்றும் நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தற்போது சரியான நடவடிக்கைகளை நாங்கள் பின்பற்றுகிறோம்” – என்றார்.
உண்மையான தரவுகளை ஆராய்ந்து, அனைத்து மக்களுடனும் கலந்துரையாடிய பின்னர் இந்தத் தனிமைப்படுத்தல்களை மிகவும் கவனமாகச் செய்து வரும் நிலையில், முழு நாட்டையும் முடக்க வேண்டிய அவசியம் இன்னும் ஏற்படவில்லை” – என்றார்.