சர்வதேச தாதியர் தின செய்தி – 2021 மே 12

தாதியர் சேவையின் நிறுவுனரான ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் ஜனன தினத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 12ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

உலகின் மிகப்பெரிய சுகாதார செயலணியாக தாதியர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உலகெங்கிலும் உள்ள மக்களுக்காக செய்யும் தனித்துவமான சேவையை விசேடமாக நினைவுகூர வேண்டும்.

‘எதிர்கால சுகாதார சேவை நோக்கிற்காக தாதியர்களாக குரல் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்காக பங்களிக்கும் இலங்கையின் தாதியர்களுக்கு பலமாக திகழ்வதற்கு ஒரு அரசாங்கமாக நாம் எப்போதும் தயார் என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்.

தாதியர் சேவையின் மதிப்பை உணர்ந்து மூன்றாண்டு தாதியர் டிப்ளோமா கல்வியை, நான்கு வருட பட்டப்படிப்பாக தரம் உயர்த்த தீர்மானித்துள்ள அரசாங்கம், தாதியர்களை சர்வதேச பயிற்சி முறைகளைத் தழுவி ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குத் தயாராவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நமது தாய்நாடு கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட தருணம் முதல் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் முப்பத்து ஆறாயிரத்திற்கும் அதிகமான தாதி அதிகாரிகள், சிறப்பு தர தாதியர்கள், பொது சுகாதார தாதியர்கள், பொது சுகாதார தாதி அதிகாரிகள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் அனைவரதும் அதிவிசேட சேவை காரணமாக ஏராளமான மக்களுக்கு இன்று வாழ்க்கை கிடைத்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக தங்களது வாழ்க்கையின் அவதானத்தையும் பொருட்படுத்தாது கொவிட் வைரஸுடன் நேருக்கு நேர் போராடும் நீங்கள் அனைவரும் மக்களின் நெஞசங்களில் நீங்கா இடம்பிடிப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.

இத்தொற்று நிலைமைக்கு மத்தியில் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளின் அர்ப்பணிப்பு வீண்போகாது இருக்க வேண்டுமாயின் நாம் எப்போதும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்.

இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்கள் மற்றும் பிற அனைத்து நோயாளர்களுக்காக அவர்கள் மேற்கொள்ளும் சேவையை முன்னரிலும் பார்க்க மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்வதற்கான பலமும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்
பிரதமர்

Leave A Reply

Your email address will not be published.