யேசு கிறீஸ்துவின் விண்ணேற்புப் பெருவிழா 13.05.2021
இயேசு விண்ணகம் சென்றார் என்ற உண்மையை நற்செய்தி நூல்கள் வாயிலாக நாம் அறிகிறோம். நாற்பதாம் நாள் விண்ணகம் சென்றார் என்று புனித லூக்கா திருத்தூதர் பணியில் குறிப்பிடுகிறார். (முதல் வாசகம்) ஆனால் இயேசுவின் உயிர்ப்புக்கும் விண்ணேற்புக்கும் இடையே கால இடைவெளியை யோவான் குறிப்பிடுவதில்லை@ உயிர்ப்பைத் தொடர்ந்து விண்ணேற்பு நிகழ்கிறது. இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு ஆகிய மூன்றுமே ஒரே மறை நிகழ்வின் மூன்று நிலைகளாக அவர் காண்கிறார். மேலும் நாற்பது என்பது முழுமையைக் குறிக்கும் விவிலிய எண் என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். இயேசு விண்ணகத்திற்கு ஏறிச் சென்றார் என்பது உலகம் பற்றிய யூதர்களின் கருத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. மேலுலகம், பூமி, பாதாளம் என்று உலகத்தை மூன்று பகுதிகளாக பிரித்துப் பார்த்தார்கள். மேலுலகத்தில் கடவுள் வாழ்வதாகவும் கருதினார்கள். மனிதன் விண்ணகத்திற்கு ஏறிக்செல்ல முயன்றான். ஆனால் தோல்வி அடைந்தான். (தொ.நூ 11:1-9, எசா 14:12-13) எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார் (2அரசர் 2:24) என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. இந்தப் பின்னணியில் சீடர்கள் இயேசுவின் விண்ணேற்பையும் காண்கிறார்கள்.
தந்தையின் பெயரையே உயிர் மூச்சாக உச்சரித்த இயேசு
தந்தையின் விருப்பத்தைச் செய்து முடிப்பதையே உணவாகக்கொண்ட இயேசு தந்தையைச் சென்றடையும் நிகழ்வே விண்ணேற்பு.
மேகம் சுரக்கின்ற நீர், ஆவியாக மேகத்திலேயே சங்கமம் அடைகின்றது. தந்தையிடமிருந்து தந்தையின் சார்பாக உலகத்திற்கு வந்த இயேசு தம் பணி முடித்தபின் மனிதரின் சார்பாக தந்தையிடம் செல்கிறார். தந்தையை மகிமைப்படுத்தத் தம் மகிமையைத் துறந்து வந்த இயேசு தந்தையிடமிருந்து மீண்டும் மகிமையைப் பெறுகின்ற நேரம்தான் விண்ணேற்பு.
மேகத்திலே அவர் மறைந்து விட்டது அவர் பெற்ற மாட்சியைக் குறித்து நிற்கிறது. (முதல் வாசகம் காண்: வி.ப.19:16, மாற் 9:9, மத் 26:24) எனவே மாட்சி பெற்ற இயேசு தந்தையிடம் சென்ற மாறுபட்ட பிரசன்னத்தால் நம்மோடு இருப்பதையே விண்ணேற்பு உணர்த்துகிறது. மேலே-கீழே, விண்ணகம்-மண்ணகம் என்ற பாகுபாடுகளெல்லாம் மறையுண்மைகளை நாம் புரிந்து கொள்ள மனிதப் புத்திக்குத் தேவையான உருவகங்கள் என்றே கொள்ள வேண்டும்.
வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் இயேசு மனித வரலாற்றை நிர்ணயம் செய்வது வானுலகத் தூதர்கள், அல்லது வானுலக ஆற்றல்கள் என்று கிரேக்கச் சிந்தனை மாற்றம் பெறுவதைக் காண்கிறோம். எல்லா அதிகாரங்களையும் பெற்று இயேசு கிறிஸ்து ஆண்டவராக உயர்த்தப்பெற்றதால் உலகத்தை ஆள்கிறார். ஏனெனில் அவர் தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். (இரண்டாம் வாசகம் தி.ப.2:3, 7:55, உரோ. 8:24, எபே.4:10, எபி. 8:1-2, 10:12, 12:12, பிலி 2:8-11, 1பேதுரு 3:22) இயேசு தந்தையின் வலப்பக்கம் அமர்வது அதிகாரம் பெற்றதை, ஆட்சிப் பொறுப்பு ஏற்றதை நமக்குக் கூறுகிறது.
அவர் வரும்வரை திருச்சபை கிறிஸ்துவின் நீட்சி என்று வரையறுக்கிறது 2ம் வத்திக்கான் சங்கம். திருச்சபை கிறிஸ்துவின் மறையுடல் என்கிறார் புனித பவுல் (உரோ. 12:5) கிறிஸ்துவின் நீட்சியாக இருந்து அவரது பணியைத் தொடர்ந்து செய்வதன் வழியாக மட்டுமே தலையாகிய அவர் பெற்ற மாட்சிமையில் நாம் பங்குபெற முடியும்.
இயேசுவின் விண்ணேற்பு அவரின் மண்ணக வாழ்வின் நிறைவைக் குறிப்பிடுகிறது. அத்தோடு மண்ணக வாழ்வின் முடிவே திருச்சபையின் தொடக்கமாகவுள்ளது. தந்தை தனக்களித்த பணியை தொடர்ந்து நிறைவேற்ற தனது ஆற்றலையும், அதிகாரத்தையும்
சீடர்களுக்கு தந்து தந்தை தமக்கு அளித்த பணியை தொடர்ந்து நிறைவேற்ற சொல்கிறார்.
இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கின்றேன்” என்று சீடர்களுக்கு கூறி அவர்களைத் திடப்படுத்தினார். சீடர்களின் பலவீனங்களையும், பாவங்களையும் அறியாமையையும், இயலாமையையும் நன்கு அறிந்த இயேசு, அவர்களை தவிக்க விடாமல் தூய ஆவியாரை அனுப்புவதாக கூறி திடப்படுத்துகிறார். இயேசு அவர்களுக்கு கொடுத்த பணிகள் நற்செய்தியை நாடெங்கும் அறிவிப்பது.தங்கள் வாழ்வால் அறிவிக்கும் நற்செய்திக்கு சான்று பகர்வது.
ஆகவே நாமும் விண்ணுலகை உரிமையாக்கிக் கொள்ள முதலில் மண்ணுலகில் ஆண்டவருக்கு சாட்சியம் பகர வேண்டும். நீதிக்காகவும், உண்மைக்காகவும், உழைக்கும்போது உயிர் கொடுக்கும் போதும் கடவுளோடு நாம் வாழ்கின்றோம்.
கடவுளோடு வாழ்வது என்பது நாம் ஏழைகளில் வறியவர்களில் நோயாளிகளில் அக்கறைக் கொள்வதும் பராமரிப்பதுமாகும்.
உலகமெங்கும் கொரனோ பெருந்தொற்றினால் துயருற்றுக் கொண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் நம்மாலான உடல் உள உதவிகளை நாம் அளிக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளோம்.
நினையாத நேரத்தில் உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு நம்மாலான ஆற்றுகைப் பணிகளை செய்து கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். தொழில்களின்றி வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்போருக்கும் உதவுவதற்கு முயலுவோம்.
இதன் மூலம் நாம் விண்ணகப் பேரின்பத்தை அடைய முடியும்.
மன்றாட்டு
விண்ணில் வாழும் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவைப் போல நாங்களும், விண்ணேற்படைந்து உமது வலப்புறம் அமரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கு வோமாக. நாம் இவ்வுலகைச் சார்ந்தவர்களாக வாழாமல், விண்ணுக்குரியவர்களாக வாழ அருள்தாரும். ஆமென்.
– RK