கொரோனா சடலங்கள்.மின் மயானத்தில் கையாள முடியாமல் திணறும் ஊழியர்கள்..

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மின் தகன மையத்தில் வழக்கத்தை விட அதிகமாக குவியும் கொரோனா சடலங்களை கையாள முடியாமல் அங்குள்ள ஊழியர்கள் அவதிப்படுகிறார்கள்.

தருமபுரி அரசு மருத்துவமனை அருகே உள்ள நகராட்சி பச்சையம்மன் மயானத்தையொட்டி மின்சார தகன மேடை உள்ளது. அங்கு இறந்து போனவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது வழக்கம்.

தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் அதிவேகமாக பரவி உயிரிழப்புகளின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் , திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையை நாடுகின்றனர்.

அப்படி வருபவர்களில் இறந்து போக நேரும்போது, அவர்களின் உடல்களை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல விரும்புவதில்லை.

தருமபுரியிலேயே ஒரு அவசரஊர்தியை வாடகைக்கு பேசி அந்த சடலத்தை நேராக பச்சையம்மன் மின் மாயன தகன மேடைக்கு கொண்டு சென்று எரியூட்டுமாறு கூறுகிறார்கள். இதுபோல, தினமும் 15 சடலங்கள் வரை எரிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கொரோனோ தொற்று பாதிப்புக்கு முன்பு, ஒரு மாதத்துக்கே 30 சடலங்கள் வரை மட்டுமே எரிக்கப்பட்டன.

இது ஒருபுறமிருக்க சடலங்களை எரிக்கும் தொழிலாளர்கள் கூறும் போது

“கேஸ் வரும் டூயூபில் அடைப்பு ஏற்பட்டு தகன மேடை அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. அப்போது மரக்கட்டையை அடுக்கி அதன் மீது சடலங்களை வைத்து எரிக்கிறோம். அப்படி எரிக்கும் போது எங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இப்போது கூட இரண்டு நாட்களாக எரியூட்டும் சாதனம் பழுதடைந்து விட்டதால் மரக்கட்டைகளைக் கொண்டே சடலங்களை எரிக்கிறோம்,” என்கின்றனர்.

அத்துடன் மருத்துவமனையில் இறந்த நோயாளியுடன் இருந்த உறவினர்கள் இறுதிச்சடங்கு நிகழ்வின்போது முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் எங்கள் அருகிலேயே நிற்கின்றனர்.

இதனால் எங்களுக்கும் தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் உள்ளோம் என்கிறார் ஒரு ஊழியர்.

இவை ஒருபுறம் இருக்க சடலத்தை எரிப்பதற்கு காத்திருக்க பொறுமை இல்லாத சிலரோ இரவோடு இரவாக சுடுகாட்டில் அதை வைத்து அவர்களே எரித்து விட்டு சொல்லிக்கொல்லாமல் செல்கின்றனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது..

“அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அப்போது தான் முழுமையாக கொரானாவை கட்டுப்படுத்த முடியும் இறந்தவர்களின் சடலங்களை எரிப்பவர்கள் உரிய பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். இறந்தவர்களின் உறவினர்கள் சடலங்களை எரிப்பவர்ளை பணி செய்ய அனுமதித்து வெளியே காத்திருக்க வேண்டும்,” என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.