இஸ்ரேலுக்கு வலுவான பாடம் புகட்ட வேண்டும் – துருக்கி அதிபர் ரசித் தாயூப் எர்டோகன்.
இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று துருக்கி அதிபர் ரசித் தாயூப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் துருக்கி அதிபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது இஸ்ரேல் பாலஸ்தீனர்களை நடத்தும் முறையை கருத்தில் கொண்டு சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு வலுவான மற்றும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று புதினிடம் அவர் கேட்டுக்கொண்டார்.