தமிழக அரசு 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய டெண்டரை வெளியிட்டது

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு, 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டெண்டருக்கு ஜூன் 5-ம் தேதி காலை 11 மணிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் பகல் 12 மணிக்கு டெண்டர் திறக்கப்பட்டு, தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான நிறுவனம் முடிவு செய்து தேர்வு செய்யப்படும்.