காசா – இஸ்ரேல் சண்டையில் சிக்கியிருக்கும் தாய்மார்கள் : ஜேக் ஹன்டர்

காசா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே ஏவுகணைகள் வந்து விழத் தொடங்கியது முதல் நஜ்வா ஷேக்-அகமது தூங்க முடியாமல் தவித்து வருகிறார்.

“இரவு நேரம்தான் எங்களுக்கும் எங்கள் குழந்தைகளும் அச்சமூட்டுபவை.” என்று கூறும் நஜ்வா 5 குழந்தைகளின் தாய். “எந்த நேரத்திலும் வீடு மயானமாக மாறிவிடும்”

இஸ்ரேலியப் படை விமானங்களின் உறுமல்களுடன் குண்டுகள் வெடிப்பதையும், ஏவுகணைகள் பறப்பதையும் அவர் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கிறார். “எல்லாம் சேர்ந்து எங்களை உலுக்குகின்றன. நாங்களும் நடுங்கிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் நஜ்வா.

பாலத்தீன ஆயுதக் குழுக்களும் இஸ்ரேலியப்படைகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காசாவிலும் இஸ்ரேலிலும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தாய்மார்களில் நஜ்வாவும் ஒருவர். இஸ்ரேலிய – அரபுக் கும்பல்கள் ஆங்கேங்கே வீதி மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோதல்களுக்கு நடுவே சிக்கியிருக்கும் இரு தாய்களிடம் பிபிசி பேசியது. அவர்களில் ஒருவர் பாலத்தீனியர். மற்றொருவர் இஸ்ரேலியர்.

“அச்சத்தை மறைத்துக் கொள்வது எளிதல்ல”

கடந்த புதன்கிழமை இரவில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய ஏவுகணைகள் காசாவைத் தாக்கியபோது தங்களது வீடு இருந்த முதல் தளத்தின் நடுவே நஜ்வாவும் அவரது குடும்பத்தினரும் நடுங்கிக் கொண்டிருந்தனர்.

அடுத்த குண்டு தங்களது வீட்டைத் தாக்கக்கூடும் என்று அவர்கள் அஞ்சினர். அந்த அச்சத்தை சொற்களால் விவரிக்க இயலாது என்கிறார் நஜ்வா.

“உங்களைச் சுற்றி எப்போது வேண்டுமானாலும் குண்டுகள் வந்து விழலாம். உங்களது வீட்டிலோ அதற்கு அருகிலோ தாக்குதல் நடத்தப்படலாம். பாதுகாப்பானது என்று நினைத்துக் கொண்டிருக்கும் இடத்தை இந்தக் குண்டுகள் ஒரு நொடியில் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் நினைவுகளுக்கும், கனவுகளுக்குமான புதைகுழியாக மாற்றிவிடும்” என்று கூறுகிறார் நஜ்வா.

நஜ்வா தனது கணவர் மற்றும் 11 முதல் 22 வயதுடைய 5 குழந்தைகளுடன் காசா பகுதியின் மையத்தில் உள்ள ஒரு அகதி முகாமின் ஓரத்தில் வசித்து வருகிறார். காசா என்பது மத்திய தரைக்கடலை ஒட்டி உள்ள, 18 லட்சம் பேர் வசிக்கக்கூடிய மிகச் சிறிய துண்டு நிலப் பகுதி. இங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என காசா பகுதியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

காசாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் தீவிரவாதிகள் என்கிறது இஸ்ரேல். காசாவில் இருந்து ஏவப்பட்ட சில ராக்கெட்டுகள் குறி தவறி அங்கேயே விழுந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

நஜ்வாவின் அச்சம் உச்சத்துக்குச் சென்றது, தரை வழியாக இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பேச்சுகள் வந்தபோதுதான்.

“நீங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஒரு தாயாக இது திகிலூட்டுகிறது. என் உணர்வுகள் அற்றுப் போகின்றன”

தங்களைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தன்னுடைய குழந்தைகளுக்கு எந்த அளவுக்குச் சொல்வது என்பது பற்றி நஜ்வாவுக்கு உறுதியாக எதுவும் தெரியவில்லை.

“தாக்குதல்கள் குறித்து அவர்களிடம் கூறுவதை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் எனது அச்சத்தை குழந்தைகளிடம் இருந்து மறைக்க முடியவில்லை. ஏனென்றால் இது பாதுகாப்பான இடமா இல்லையா என்பது பற்றி உறுதியாகத் தெரியாது.”

சுற்றி நடக்கும் சண்டைகள் குறித்து குழந்தைகளிடம் மறைத்துவிட நஜ்வா முயன்று வந்தாலும், தொடர்ந்து மறைத்துக் கொண்டிருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியும்.

“செய்திகளைப் பார்க்காதீர்கள் என்று கூறினாலும், குழந்தைகள் எப்போதும் அவற்றைப் பார்த்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராமிலும் பிற சமூக ஊடகங்களிலும் செய்திகள் சுற்றி வருகின்றன. எல்லாம் அழிவுகள்தான்”

நஜ்வாவுக்கு தொடர்ந்து நடக்கும் சண்டைகளால் குழ்தைகளுக்கு ஏற்படும் மன நலப் பாதிப்புகள் குறித்து எப்போதும் கவலை உண்டு. இளைய மகனான முகமதுவுக்கு இப்போது 11 வயதாகிறது. இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே 2008-2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட போர்களின் ஊடாகவே அவர் வளர்ந்திருக்கிறார்.

“அவன் வளர்ந்த பிறகு அவனது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நினைவுகளைக் கூறுவான்?”

வான் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில் தனக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நஜ்வா கவலை கொண்டிருக்கிறார்.

“இத்தனை பயங்கரங்களையும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. குழந்தைகள் அழுவதையும் அலறுவதையும் கேட்டுக் கொண்டேயிருக்க முடியாது”

“நாங்கள் மிகவும் அஞ்சினோம்”

இஸ்ரேலிய அரபுக் கும்பல் லோட் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே வன்முறையில் ஈடுபட்ட போது, இதுதான் அங்கிருந்து இடம்பெயருவதற்கான தருணம் என்று டோவா லெவி முடிவெடுத்தார்.

அந்த மாலை நேரம் முழுவதும் வாட்சாப் குழுக்களில் வந்து கொண்டிருந்த செய்திகளை அவர் படித்துக் கொண்டிருந்தார். ஒரு “கும்பல்” மசூதியில் இருந்து வெளியேறி நகரின் பல பகுதிகளிலும் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக நண்பர்கள் டோவாவுக்கு தகவல்களை அனுப்பினார்கள்.

அந்தச் செய்தி கிடைத்த சிறிது நேரத்தில் வன்முறைக் கும்பல் தங்கள் வீட்டுக்கு அருகே வந்துவிட்டதாகக் கூறுகிறார் டோவா. அப்போது அவரது வீட்டில் அவர், அவரது கணவர், இரு குழந்தைகள் ஆகியோர் இருந்தனர்.

“அவர்கள் பொருள்களை எரிக்கத் தொடங்கினர். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. திகிலூட்டியது. என்னுடைய வீட்டுக்கு வந்து கதவை உடைப்பதற்கு எது தடையாக இருந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றார் டோவா

உடனடியாக சில உடைமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு தெற்கே வேறொரு நகரில் இருந்த தன்னுடைய மைத்துனர் வீட்டுக்குப் புறப்பட்டார்கள். “வீட்டில் இருப்பதற்கு மிகவும் அச்சமாக இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டோம்” என்கிறார் டோவா.

அவர்கள் லோட் நகரை விட்டு வெளியேறிய பிறகு அங்கு வீதிகளில் வன்முறைகள் அதிகரித்தன. இஸ்ரேலியர் – அரபுக்களின் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. யூதரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் இறுதிச் சடங்கு நடந்த மறுநாள் போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதினார்கள். வாகனங்களும் கட்டடங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. “லோட் நகரில் உள்நாட்டுப் போர் வெடித்திருக்கிறது” என்று மேயர் அறிவித்தார்.

வழக்கமாக யூதர்களின் வாசற்கதவில் பொருத்தப்பட்டிருக்கும் மதப் பிரார்த்தனை வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு தோல் பொருள் டோவாவின் வீட்டிலும் உண்டு. அதை அகற்றிவிடும்படி தனது அண்டை வீட்டுக்காரரிடம் டோவா கேட்டுக் கொண்டார். “கதவை உடைத்து கும்பல் உள்ளே நுழைந்துவிடுமோ என்று மிகவும் அஞ்சுகிறேன்” என்கிறார் டோவா.

வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது அங்கே என்ன இருக்கும் என்ற கவலையும் டோவாவுக்கு இருக்கிறது.

“நாங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லப் போகிறோமா என்பது தெரியவில்லை. திரும்பிச் செல்லும்போது எங்கள் வீடு குண்டுவீசித் தகர்க்கப்படுமா என்றும் தெரியாது”

டோவாவின் குடும்பம் லோட் நகரை விட்டு வெளியேறிய பிறகு அங்கு ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. காசாவில் இருந்து வந்த ராக்கெட் ஒரு காரைத் தாக்கியதில் இரு இஸ்ரேலிய அரபுக்கள் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதும் ஆயிரக்கணக்கான மக்கள் பதுங்குமிடங்களுக்குச் சென்றுவிட்டார்கள். டோவாவின் யூத அண்டை வீட்டுக்காரர்களும் அவர்களில் அடங்குவார்கள். பதுங்குமிடங்களில் இஸ்ரேலிய அரபுக்களும் உடனிருப்பார்கள். அவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்று கருதுவதால் யூதர்களின் அச்சம் அதிகரிக்கிறது.

சிலர் பதுங்கு குழிகளுக்கு உள்ளே செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். சிலர் சிறிது கீழே சென்றுவிட்டு உடனே வெளியேறிவிட்டனர்” என்கிறார் டோவா.

பதற்றம் அதிகரிப்பதால் அதை எப்படி தனது நான்கரை வயது மகனுக்கு விளக்குவது என்பது டோவாவுக்குத் தெரியவில்லை.

சில கெட்டவர்களால் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன என அவனுக்குத் தெரியும். அவர்கள் அரபுக்கள்தான், அவர்கள்தான் நமகுக்கு இதைச் செய்கிறார்கள் என என்னால் கூற முடியாது. அண்டை வீட்டுக்காரர்களுடன் அமைதியான முறையில் அவன் வாழ வேண்டும் என நான் விரும்புகிறேன். அரபுக்களைப் பார்த்து இப்படி அஞ்சும் வகையில் அவன் வளரக்கூடாது என நான் நினைக்கிறேன்”

மோசமடைந்து வரும் சிக்கல்களால் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவோம் என்று டோவோ அஞ்சுகிறார்.

“நாங்கள் அனைவரும் குடிமக்கள்தான். நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறோம். அச்சமாக இருக்கிறது. மிக மிக அச்சமாக இருக்கிறது.

-பிபிசி 

Leave A Reply

Your email address will not be published.