இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போரை நிறுத்த, அமெரிக்கா முயற்சி.
மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்ற இஸ்ரேல் முயற்சி மேற்கொண்டதை அடுத்து, இரு தரப்பிலும் மோதல் வெடித்தது.
ஒருவாரமாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகரில் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பல கட்டடங்கள் தரைமட்டமாயின. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினரும், இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில், காசாவைச் சேர்ந்த 41 குழந்தைகள் 20 பெண்கள் உட்பட, 145 பேர் கொல்லப்பட்டனர். 950 பேர் காயமுற்றனர். பதுங்கு குழிகளை நோக்கி நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட ஹமாஸ் தளபதிகள் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
முன்னெச்சரிக்கையின்றி, காசா குடியிருப்பு பகுதிகளில், இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்துவதால், ஏராளமானோர் உயிர் பிழைக்க, ஐ.நா., அகதி முகாம்களுக்கு ஓடுகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரமழான் பெருநாளைக் கொண்டாட, உறவினர் வீட்டுக்குச் சென்ற தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள், குண்டு வீச்சில் பலியாகி விட்டதாக, முஹம்மது அபு ஹதாப் என்பவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இவர், கையில் ஐந்து மாத குழந்தையுடன், காணாமல் போன 11 வயது மகனை கட்டட இடிபாடுகளில் தேடி வருகிறார்.
ரமழான் தினத்தில் நடந்த தாக்குதலில், இது போல பல குடும்பங்கள் சிதறிப் போயுள்ளன. குண்டு வீச்சுக்கு நடுவே நேற்று காசா நகரில், 1948ல், இஸ்ரேல் ராணுவத்தால் விரட்டி அடிக்கப் பட்ட ஏழு லட்சம் பாலஸ்தீனியர்களின் நினைவாக, ‘நக்பா’ தினம் அனுசரிக்கப்பட்டது.
இதற்கிடையே இஸ்ரேல் வந்த, அமெரிக்க தூதர் ஹடி அமர், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் உள்ளிட்டோர், போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பினரிடம் பேச்சு நடத்தியுள்ளனர்.
முன்னதாக எகிப்து, ஓராண்டுக்கு போர் நிறுத்தம் செய்யும் யோசனையை முன் வைத்தது. இதற்கு, ஹமாஸ் அரசு ஒப்புக் கொண்ட போதிலும், இஸ்ரேல் ஏற்க மறுத்து விட்டது. தற்போது போர் நிறுத்தம் தொடர்பாக பேச, அமெரிக்கா முன்வந்து உள்ளதால், சுமுக முடிவு எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
காசா நகரில், ‘காசா டவர்’ என்ற பெயரில் உள்ள, 11 மாடி கட்டடத்தில், கத்தார் நாட்டை மையமாக வைத்து செயல்படும், ‘அல் ஜசீரா டிவி’ மற்றும் அமெரிக்காவின் ஏ.பி., செய்தி நிறுவனம் உட்பட, பல சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய விமான தாக்குதலில், காசா டவர் கட்டடம் தரைமட்டமானது. இந்த தாக்குதலில், உயிர் பலி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. அல் ஜசீரா செய்தி சேனல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காசா டவர் மீது, இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலை கண்டித்தும், இஸ்ரேலுக்கு எதிராகவும், அனைத்து ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளும், இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏ.பி., செய்தி நிறுவனமும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன், அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் வெளியேறுவதற்கு, இஸ்ரேல் ராணுவம் ஒரு மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித்தது குறிப்பிடத்தக்கது.