சிகை அலங்கார நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய கட்டாய விதிமுறைகள்.
தற்போது நாட்டில் கோரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாமும் மிக கவனமாக விழிப்புடன் எமது தொழிலினை மேற்கொள்வோம்.
கொடிய நோயில் இருந்து எம்மையும் எம்மிடம் வரும் வாடிக்கையாளர்களையும் பாதுக்காப்போம்.
●ஊராடங்கு மற்றும் விடுமுறை நாட்களில்.வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கோ. அல்லது தங்கள் வீடுகளிலோ சிகை அலங்காரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.இது கட்டாயமாக தவிர்க்கப்படவேண்டும்.
●காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை நோ, சுவாசிப்பதில் சிரமம், போன்ற நோய் அறிகுறி உடையவர்கள், கடந்த 14 நாட்களுக்குள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகப்படும் ஒருவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட ஒருவர் எக்காரணம் கொண்டும் அங்கு பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. பணியாற்றுபவர்களின் பெயர், நிரந்தர முகவரி, பணியாற்றும் காலம் போன்ற விபரங்கள் அடங்கிய பட்டியல் சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பேணப்பட வேண்டும்
●ஒவ்வொரு பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் சவர்காரமிட்டு கை கழுவுவதற்கான ஏற்பாடு நிலையத்தின் வெளிப்புறத்திலும் உள்ளகத்திலும் செய்யப்படல் வேண்டும்.
●பணியாளர்கள் கட்டாயமாக முகக் கவசம் மற்றும் முகத்தடுப்பு அல்லது பாதுகாப்புக் கண்ணாடி அணிந்திருக்க வேண்டும்.
●காலினால் செயற்படுத்தப்படும் கழிவகற்றல் கூடை ஒவ்வொரு முடிதிருத்தும் கதிரைக்கும் அருகிலும் இருக்க வேண்டும்.
●வாடிக்கையாளர்களிடையே ஆகக் குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளி இருக்கத்தக்க முறையில் கதிரைகள் ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும்.
●சிகை அலங்கரிப்பு நிலையத்தில் இடவசதிகளுக்கேற்ப காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் அளவினை மட்டுப்படுத்த வேண்டும்.
●பத்திரிகைகள், சஞ்சிகைகள், எவையும் வாடிக்கையாளரின் பாவனைக்காக வழங்கப்படக்கூடாது.
●ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சேவையினை வழங்கிய பின்னர் சவர்க்காரமிட்டு கை கழுவிய பின்பே மற்றொருவருக்கு சேவை வழங்குதல் வேண்டும்.
●முடி திருத்தும் போது வாடிக்கையாளரின் பின்புறமாகவும் பக்கப் புறமாகவும் இருந்து மட்டும் செயற்பட வேண்டும். ஒருபோதும் முகத்துடன் முகம் நோக்கக்கூடியவாறு சேவையினை வழங்க முற்படக்கூடாது.
●ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பயன்படுத்தும் உபகரணங்களை மதுசார தொற்றுநீக்கி மூலம்; அல்லது கொதிக்கும் நீரில் 20 நிமிடங்கள் அவித்து முறைப்படி தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.
●ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வழங்கப்பட்ட சேவை நிறைவடைந்த பின்னர் கதிரையும், உபகரணங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும்.
●நிலையத்தில் சேரும் கழிவுகள் யாவும் பைகளில் சேகரிக்கப்பட்டு உரிய முறையில் கழிவு முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும்.
●ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்தியான துணிகள், துவாய்கள் பாவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பாவித்த துணியை தோய்க்கப்பட்டு உலர்ந்த பின்னரே இன்னொரு வாடிக்கையாளருக்கு பாவிக்க முடியும். அதேவேளை வாடிக்கையாளரை தமது வீட்டிலிருந்தே துணியை எடுத்துவருவதற்கு ஊக்குவிப்பது நலம் தரும்.
●குளிரூட்டிகள் மற்றும் வளிச் சீராக்கிகள் சிகை அலங்கரிப்பு நிலையத்தின் உள்ளகங்களில் பாவிப்பது தடைசெய்யப்பட வேண்டும்.
●கதவுகள், யன்னல்கள் திறந்த நிலையில் வைக்கப்பட்டு காற்றோட்டம் பேணப்பட வேண்டும். திரைச்சீலைகள் இடுவதை இயன்றளவு தவிர்த்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க தவறும் அழகக நிலையங்களுக்கு எதிராக போலீஸ் மற்றும் சுகாதார துறையினரால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சங்கம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்பதனை அறியத்தருகின்றோம்.