வீடுகளில் இருக்கும் கொரோனா நோயாளர்களுக்கு உதவ தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
இலங்கையில் இதுவரை வைத்தியசாலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கும் கொரோனா நோயாளர்களுக்கு உதவுவதற்குப் புதிய தொலைபேசி இலக்கங்களை சுகாதார சேவைகள் பிரிவு வெளியிட்டுள்ளது.
இந்த விசேட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி வீடுகளில் உள்ள கொரோனா நோயாளர்கள் தொடர்பில் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
011 79 66 366 என்ற இலக்கத்துக்கும், 1906 அல்லது 1999 என்ற துரித எண்களுக்கும் அழைப்பை மேற்கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெறமுடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அறிகுறியற்ற கொரோனா நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்குவது தொடர்பில் சுகாதாரத் தரப்பினர் ஆலோசித்து வருகின்றனர் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே அறிகுறியற்ற கொரோனா நோயாளர்களை சொந்த வீடுகளில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வார இறுதியில் வெளியிடப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.