அடுத்து வரும் 3 வாரங்கள்மிகவும் அவதானமிக்கவை! – இராணுவத் தளபதி எச்சரிக்கை
இலங்கையில் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என்று கொரோனாத் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எனவே, நாட்டு மக்கள் இந்தக் காலப்பகுதியில் தேவைப்பட்டால் மட்டுமே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வீரியமாகப் பரவி வரும் நிலையில் சுகாதாரப் பிரிவினர் மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகள் இல்லாத சந்தர்ப்பங்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.
பயணக் கட்டுப்பாட்டு நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறைக்கு அமைய குறைந்தபட்ச ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும்.
நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்” – என்றார்.