இலங்கைத் தீவும் ,கொரோனாவிற்கு பின்னரான அரசியல் போக்கும் : யதீந்திரா

கொரேனாவிற்கு பின்னரான அரசியலென்பது, ஒரு உலகளாவிய போக்கு. புதிய உலக ஒழுங்கு தொடர்பான எதிர்வுகூறல்களே மேற்படி, உலகளாவிய போக்கின் அடிப்படையாக இருக்கின்றது. இந்த எதிர்வு கூறல்கள் மூன்று விடயதானங்களை முன்னிலைப்படுத்துகின்றது. ஒன்று, இதுவரை உலகில், மேலாதிக்கம்பெற்றிருந்த உலமயமாக்கல் சூழல் கேள்விக்குள்ளாகின்றது. இரண்டு, முதலில் நாங்கள் (முதலில் எங்களின் நாடு ) என்றவாறான தேசிவாத எழுச்சி. மூன்றாவது, உலக புவிசார் அரசியலில் சீனாவின் எழுச்சி.

சர்வதேச அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் முன்னணி சிந்தனையாளர்கள் மத்தியில், இது தொடர்பில் பலவாறான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி, ஜோ பைடன் தனது முதலாவது வெள்ளைமாளிகை செய்தியாளர் சந்திப்பில், இந்த விவாதங்களை நினைவூட்டியிருந்தார். அதாவது, 21ஆம் நூற்றாண்டு என்பது, ஜனநாயக நாடுகளின் செயற்திறனுக்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போராகவே இருக்கப் போகின்றது.

ஜனநாயகம் ஆபத்தில் இருக்கின்றது – அதன் பயன்பாட்டை நாம் நிரூபித்தாக வேண்டும். பைடனின் மேற்படி கூற்று, பெருத்தொற்றுக்கு பின்னரான உலக ஒழுங்கு தொடர்பான உரையாடல்களை துல்லியமாக பிரதிபலிக்கின்றது. தற்போது ஏற்ட்டிருக்கும் உலகளாவிய நெருக்கடியை சிலர், 1956இல் இடம்பெற்ற சுயஸ் கால்வாய் நெருக்கடியோடு ஒப்பிட்டுகின்றனர்.

அதாவது, சுயஸ் கால்வாய் நெருக்கடியானது, அதுவரையில் பிரித்தானியாவிடமிருந்த உலக அதிகார செல்வாக்கை, அமெரிக்காவை நோக்கி நகர்த்துவதல் பெரும் பங்குவகித்தது. பெருந்தொற்றுக்கு பின்னரான உலக புவிசார் அரசியலில் சீனாவின் செல்வாக்கு வேகமாக அதிகரித்துவருவதை அடிப்படையாகக் கொண்டே, இவ்வாறான அபிப்பிராயங்களை சிலர் முன்வைக்கின்றனர். ஆனால் இவைகள் அனைத்தும் எதிர்வு கூறல்களே. அனைத்து எதிர்வு கூறல்களும் சரியாகிவிடுவதில்லை.

உலகளாவிய அதிகார அரசியலில் மேலாதிக்கம் செலுத்திவரும் ஐக்கிய அமெரிக்கா, அதன் இடத்தை அவ்வளவு விரைவாக இழத்துவிடப் போவதில்லை. ஏனெனில், உலகின் நான்கு பெரும் சக்திகளை தோற்கடித்தே, அமெரிக்கா இவ்வாறானதொரு இடத்தில் இருக்கின்றது. அந்த இடத்தை சீனாவின் எழுச்சி சிதைத்துவிடும் என்பதை தர்க்கரீதியில் மறுதலிக்கும் வாதங்களும் உண்டு. ஆனால், அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கிற்கு சவால்விடும் ஒரு சக்தியாக சீனா எழுச்சியடைந்துவிட்டது என்பதில் எவருமே முரண்படுவதில்லை.

இந்த பின்புலத்தில்தான், உலகளாவிய புவிசார்-அரசியல் விவாதங்களின் மைய பொருளாக, சீனாவின் எழுச்சி நோக்கப்படுகின்றது. 1990களுக்கு முன்னர், இவ்வாறானதொரு உரையாடல் சோவியத்தை முன்னிலைப்படுத்தி இடம்பெற்றிருந்தது. ஆனால் சோவியத் கால நெருக்கடிகளும், சீனாவின் எழுச்சியினால் ஏற்பட்டிருக்கும் சவால்களும் ஒன்றல்ல. ஏனெனில் சோவியத் கால நெருக்கடி இராணுவரீதியானது. அது, முற்றிலும் இரு பெரும் உளவுத்துறைகளுக்கிடையிலான மோதலாக இருந்தது. ஆனால் அவ்வாறானதொரு நிலைமையை நோக்கி, இன்னும் உலகம் நகரவில்லை.

பெருந்தொற்றுக்கு பின்னரான உலகளாவிய அரசியல் போக்கானது, நான் மேலே குறிப்பிட்டவாறான அரசியல் விவாதங்களின் அடிப்படையிலேயே, அமைந்திருக்கின்றது. இது தொடர்பில் விரிவாக பேசலாம் ஆனால் எனது அவதானம், இவ்வாறான உலகளாவிய அரசியல் போக்கானது, தெற்காசிய பிராந்தியத்தில் அமைந்திருக்கும் சிறிய நாடான இலங்கைத் தீவின் அரசியல் போக்கில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பது பற்றியதாகும்.

இலங்கைத் தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவிட்டது என்பது ஒரு பொதுவான அவதானம். ஆனால் இந்தச் செல்வாக்கு, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தலாம்? – இலங்கையின் அடிப்படையான அரசியல் கட்டமைப்பில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தலாம்? இது தொடர்பில் விரிவான ஆய்வுகள் இல்லை. இது தொடர்பில் ஆங்காங்கே சில அவதானங்கள் உண்டு. இவ்வாறான அவதானங்கள் அனைத்தும், பொதுவாக, ராஜபக்சக்களின் அரசாங்கத்தை அடிப்படையாக் கொண்டதாக அமைந்திருக்கின்றதே தவிர, இலங்கைத் தீவின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்கவில்லை.

இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான வரலாற்று ரீதியான தொடர்பு மிகவும் நீண்டது. ஆனால், நவீன அரசியலில் ராஜதந்திரரீதியான உறவுகளை, 1957 றப்பர் – அரசி உடன்பாட்டிலிருந்தே நோக்கலாம்.

ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தமே, சீனாவிற்கும் இலங்கைக்குமான நெருக்கத்தை வலுப்படுத்தியது. இது சீன – இலங்கை உறவில் ஒரு மைல்கல் எனலாம். இறுதி யுத்தத்தின் போது, இந்தியா உள்ளக அரசியல் காரணங்களை முன்வைத்து, இலங்கை அரசிற்கு இராணுவரீதியில் அதிக உதவிகளை செய்ய விரும்பவில்லை. அதே வேளை, அமெரிக்கா, மனித உரிமைகள் மீதான கரிசனையை முன்ணிறுத்தி, இராணுவரீதியில் உதவிகளை வழங்குவதை தவிர்த்திருந்தது.

இந்த இடைவெளியையே சீனா மிகவும் நுட்பமாக பயன்படுத்திக்கொண்டது. ராஜபக்சக்களின் ஆசையை, தேவை சரியாக கணக்கிட்டுக் கொண்ட சீனா, அதனை பூர்த்திசெய்ததன் மூலம், இலங்கையின் காலூன்றுவதற்கான அடித்தளத்தை சரியாக போட்டுக்கொண்டது. இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டுமென்பது மட்டுமே, ராஜபக்ச அரசின் ஒரேயொரு ஆசையாகவும் இலக்காகவும் இருந்தது. இதனை சீனா நன்கு முகர்ந்திருந்தது.

யுத்தத்தை எவ்வாறேனும் வெற்றிகொள்ள வேண்டுமென்னும் ராஜபக்சக்களின் ஆசையே, யுத்தத்திற்கு பின்னரான சூழலிலும், சீனாவை தவிர்த்து ஓடமுடியாத நிலைமையை தோற்றுவித்திருந்தது. இதனையும் சீனா நன்கு பயன்படுத்திக் கொண்டது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும், போர்க் குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நவதாராளவாத நாடுகள், அழுத்தங்களை பிரயோகித்த போது, அங்கும் சீனாவே கொழும்பிற்கு துணைநின்றது.

இந்த பின்புலத்தில் நோக்கினால் சீனாவை விடவும், கொழும்பிற்கு வேறொரு உற்ற நண்பன் இல்லையென்னும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. சீனாவின் செல்வாக்கிலிருந்து இலங்கைத் தீவை, மீட்க வேண்டுமென்னும் பார்வை அமெரிக்காவிடம் இருப்பதாகவும், அதன் காரணமாகவே, மேற்குலக நவதாராளவாத நாடுகள் இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோக்கின்றன என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.

ஐ.நா.மனித உரிமைகள் போவையின் ஊடாக, முன்னெடுக்கப்படும் அழுத்தங்களை இப்படித்தான் நோக்க வேண்டுமென்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறான அழுத்தங்களின் இறுதி இலக்கு, ஒரு ஆட்சி மாற்றம் மட்டுமே என்பதும் அவர்களது பார்வையாகும். முதல் பார்வையில் இது தவறானதொரு பார்வையல்ல.

ஏனெனில், 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இப்படியானதொரு இலக்கு இருந்தாகவே கூறப்பட்டது. ஆனால் இந்த அணுகுமுறை வெற்றியளித்ததா, என்பதே கேள்வி. ஏனெனில், மேற்குலகின் நண்பரான, ரணில் விக்கிரமசிங்கவினால் சீனாவின் செல்வாக்கை தடுத்து நிறுத்த அல்லது, சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்க முடிந்ததா? சர்வதேச கடல் எல்லைக்கு நெருக்கமாக இருக்கும் மூலோபாய துறைமுகமான, அம்பாந்தோட்டை துறைமுகத்தை, ரணில் விக்கிரமசிங்கவே, 99 வருட குத்தகைக்கு வழங்கியிருந்தார். அவ்வாறாயின் ஆட்சி மாற்றத்தின் இலக்கு என்ன? இந்த சம்பவம் எதனை உணர்த்துகின்றது? ஆட்சி மாற்றங்களால் இலங்கையை அதிகம் சீனாவின் செல்வாக்கு வளையத்திலிருந்து அகற்ற முடியாது என்பதையா?

இந்த அனுபவங்களின் வாயிலாக நோக்கினால், மேற்குலக நவதாராளவாத நாடுகள், ஆட்சி மாற்றமொன்றை மட்டுமே, இலக்கு வைத்துத்தான், கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றது என்னும் வாதம் தர்க்கரீதியில் பலமிழக்கின்றது. அதுவும் ஒரு நோக்கமாக இருக்கக் கூடும். எனவே, இந்த விடயத்தை வேறு விதமாக பார்க்க வேண்டுமா?

உண்மையில் இலங்கையின் மீதான சீனாவின் செல்வாக்கு, உடனடியாக இந்தியாவையே தாக்குகின்றது. ஆனாலும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இது தொடர்பில் பதட்டமடையவில்லை. விடயங்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவே கருதுகின்றனர். அவர்களது கருத்துக்களை நோக்கினால் அவ்வாறுதான் தெரிகின்றது.

இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்த விடயத்தில் தவறுசெய்வதாக சில தமிழ் அன்பர்கள் கூறிக்கொண்டிருப்பது வேறு விடயம். இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு ஈழத் தமிழர்கள் அறிவுரை கூற முற்படுவது எந்தவகையில் சரியானதென்பது பிறிதொரு விடயம். ஆனால் தனது உடனடி அயல்நாடான இலங்கைக்குள், சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை நிச்சயமாக இந்தியா மகிழ்ச்சிக்குடன் நோக்கப் போவதில்லை . ஆனால், தனது பார்வையலிருந்து அதிகம் விடயங்கள் சென்றுவிடப் போவதில்லையென்றே இந்தியா கருதுகின்றது. இந்த விடயத்தில் சீனாவும் ஒரு தெளிவான பார்வையை நிச்சயம் கொண்டிருக்கும்.

ஒரு உலகளாவிய சக்தியாக எழுச்சியுற்றுவரும் சீனா, இலங்கையின் புவியியல் அமைவிடத்தை கருத்தில்கொள்ளாமல், இலங்கைக்குள் பிரவேசிக்கவில்லை. இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தையும் சீனா குறைத்துமதிப்பிடும் என்றும் கருதுவிட முடியாது. இந்த விடயங்கள் அனைத்தையும் தொகுத்தே, இலங்கையின் ஆட்சியாளர்களும் தங்களின் வெளிவிவகார அணுகுமுறையை கையாளுவர்.

இந்தியா தொடர்பில், கொழும்பு குறைவான மதிப்பீட்டை கொண்டிருக்காது, அதே வேளை, தூரநோக்கற்ற அணுகுமுறையை கையாளுமென்றும் கருதமுடியாது. ஏனெனில் இந்தியாவினால் எவ்வேளையிலும் இலங்கைத் தீவில் நிலைகொள்ள முடியுமென்பதை கொழும்பு நன்கறியும். அதே வேளை, இந்தியா எதுவரை பொறுக்கும் என்பதிலும் அவர்களிடம் ஒரு கணிப்பு இருக்கக் கூடும்.

ஆனால் கோட்டபாய ராஜபக்ச, தனது அரசாங்கம், ஒரு நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கப் போவதாக கூறுகின்றார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் அந்த நடுநிலையை கடைப்பிடிப்பதில் சறுக்கல்கள் ஏற்படுகின்ற போதுதான், புதிய பிரச்சினைகளை இலங்கைத் தீவு எதிர்கொள்ள நேரிடும்.

இதுவரையில் இலங்கைத் தீவு பாரிய புவிசார் அரசியல் நெருக்கடிகள் எதனையும் எதிர்கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஆனால் கொழும்பு துறைமுக நகரம் செயற்படத் தொடங்கிய பின்னர், அவ்வாறான நெருக்கடிகள் ஏதும் ஏற்படலாமா என்பதை இப்போதைக்கு ஊகிப்பது கடினம். கொரோனாவிற்கு பின்னரான உலகளாவிய புவிசார் அரசியல் போக்குகள் இலங்கையை நேரடியாக தாக்குமாயின், அது சீனாவினுடனான நெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருக்கும்.

மீண்டும், பைடன் தலைமையிலான அமெரிக்கா குறிப்பிட்டிருக்கும் விடயம்தான் இந்த இடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. அதாவது, ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போர். இந்த விடயத்துடன்தான், இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்புறுகின்றது. இந்த விடயத்துடன்தான் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்புறுகின்றது.

-RK

Leave A Reply

Your email address will not be published.