வடக்கில் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆளணிப் பற்றாக்குறை!
வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்குப் போதிய ஆளணி வசதி இல்லாமல் வடக்கு சுகாதாரத்துறை பெரும் இடரை எதிர்நோக்கியுள்ளது.
தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்வதால் வைத்தியசாலைகளிலும் ஆண், பெண் என்று இரண்டு விடுதிகள் கொரோனா நோயாளர்களுக்கான ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனைவிட தனிமைப்படுத்தல் நிலையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், சிற்றூழியர்கள் என்று அனைத்துத் துறையிலும் ஆளணிகள் இல்லாமல் வடக்கு சுகாதாரத்துறை திண்டாடத் தொடங்கியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்களுக்கு பெருமளவு வெற்றிடம் காணப்படுகின்றது. குறிப்பாக சிற்றூழியர்களுக்கு 65 சதவீதம் வெற்றிடம் காணப்படுகின்றது.
இந்தநிலையில், ஓர் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 2 வைத்தியர்கள், 4 தாதியர், 4 சுகாதார உதவியாளர்கள், 10 சிற்றூழியர்கள் தேவை. இவர்கள் 14 நாட்கள் பணியாற்றிய பின்னர் ஒரு வாரம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின்னர் இன்னொரு அணி கடமைக்குச் செல்ல வேண்டும். அதேபோன்று வைத்தியசாலைகளிலும் கொரோனா விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அங்கும் இதே மாதிரியான ஆளணி வளம் தேவை.
இவை எல்லாவற்றுக்கும் ஈடுகொடுக்கக் கூடிய வகையில் வடக்கு சுகாதாரத் துறையிடம் ஆளணி வளம் இல்லை என்று கூறப்படுகின்து.
கொரோனாத் தொற்று வடக்கில் இன்னமும் அதிகரித்தால் பெரும் நெருக்கடி நிலை ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.