முல்லைத்தீவு மாவட்டத்தில் 443 தொற்றாளர்கள்; 538 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 443 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் 538 குடும்பங்களைச் சேர்ந்த 2153 நபர்கள் தனிமைப்படுத்ப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக இன்று(21)ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
குறித்த 443 கொரோனா தொற்றாளர்களில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களே அதிக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 18ம் திகதி புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய பொலீஸ் பிரிவுகள் முடக்கப்பட்டு இன்று புதுக்குடியிருப்பில் 9 கிராம அலுவலர் பிரிவும், முள்ளியவளையில் இரண்டு கிராம அலுவலகர் பிரிவும் தவிர ஏனைய பகுதிகள் காலை 6.30 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
ஆயினும் முள்ளியவளை பொலீஸ் பிரிவின் இரண்டு கிராம சேவகர் பிரிவும் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவின் 9 கிராம சேவகர் பிரிவும் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.
முடக்க நிலை இன்று தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டையின் இறுதி ஒற்றை இலக்கமுடையோர் மட்டும் இன்று அத்தியவசிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளது என்பதற்காக வெளியில் செல்லாது இயன்றவரை குடும்பத்திலிருந்து ஒரு நபர் அடையாள அட்டை இலக்கத்திற்கேற்ப அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தொற்றினைக் கட்டுப்படுத்த முடியும்.
பாரியளவான பரவலாக இருப்பதனால் ஒவ்வொரு தனிநபர்களும் இரு வாரங்களுக்கு தொடர்புகளை தவிர்ப்பதனூடாக மாவட்டத்திலிருந்து நோயை ஒழிக்கலாம். எனவே மக்களை அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொண்டார்.
மீண்டும் பயணத் தடை இரவு 11.00மணிக்கு அமுல்ப்படுத்தப்பட இருப்பதனால் எதிர்காலத்தில் விசேடமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பாஸ்(Pass) நடைமுறை பிரதேச மற்றும் மாவட்ட செயலகத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.