நிலைமை மிகவும் மோசம்! இரு வாரங்களுக்கு நாட்டை முடக்கவும்!அரசிடம் மருத்துவர் சங்கம் அவசர கோரிக்கை.

நாடு முழுவதையும் 14 நாட்களுக்கு முழுமையாக முடக்கி வைக்குமாறு இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன, அரசிடம் அவசர கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுகாதாரக் கட்டமைப்பு பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில் தொற்றாளர்கள் நிரம்பியுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் ஏனைய நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதிலும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
சமூகத்தில் மேலும் பல தொற்றாளர்கள் இருக்கலாம். எனவே, தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை, தேசிய அடையாள அட்டை முறைமை, மூன்று நாட்கள் குறுகிய பயணக் கட்டுப்பாடு போன்றவற்றால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது.
எனவேதான் 14 நாட்களுக்கு கடும் பயணக் கட்டுப்பாடுகளை அல்லது ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்குமாறு கேட்கின்றோம். அதன்பின்னர் நிலைமையை மீளாய்வு செய்து கட்டம், கட்டமாக ஊரடங்கைத் தளர்த்தலாம்” – என்றார்.