கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்மட்டத்தில் நடவடிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தில் விடியல் மற்றும் வானவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் பாதுகாப்பு விடயத்தில் உயர்மட்டத்தில் தீவிர கவனம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பின்பேரில் அவரது மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆடைத்தொழிற்சாலை நிர்வாக உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடாத்தியுள்ளார்.
இதன்போது, மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பை அவர் நிர்வாக உயர்மட்டத்துக்குத் தெரிவித்தார்.
இதேபோல், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சக இணைத்தலைவர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இந்த விடயம் குறித்து கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடாத்தி, ஆடைத்தொழிற்சாலை பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்துள்ளார்.
மேலும், ஆடைத்தொழிற்சாலையின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடல் நடாத்திய அவர், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகனன் இந்த விடயம் குறித்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தல்கள் குறித்துக் கலந்துரையாடி, ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு அதன்படி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் பாதுகாப்புக் குறித்து உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் இதுகுறித்துக் குழப்பமடையவேண்டாம் என்றும், இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி மிக்க இந்தச் சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், அதேசமயம், நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிப்புச் செய்யும் பாரிய தொழிற்சாலை நடவடிக்கைகளும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 5000 பேருக்குமேல் வேலைவாய்ப்புக்ககைள வழங்கி அவர்களது வாழ்வாதாரத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ள விடியல், வானவில் தொழிற்சாலைகள் குறித்து பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்தவேண்டாம் என்றும் மேலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.