கொரோனாத் தடுப்புச் செயலணியின் முடிவே இறுதியானது! – இராணுவத் தளபதி தெரிவிப்பு.
“கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணி வெளியிடும் தகவல்களே அரசின் இறுதியானதும் உத்தியோகபூர்வமானதும் முடிவுகளாகும்.”
இவ்வாறு தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் வெளியிடப்படும் நாள்தோறும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கும் தேசிய செயலணியின் எண்ணிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாள்தோறும் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் இறுதி முடிவை இரவு வேளைகளில் நாம் வெளியிடுகின்றோம். அந்த எண்ணிக்கையில் முரண்பாடு எதுவும் இல்லை.
அதேவேளை, கொரோனாத் தடுப்புச் செயலணி மாவட்டம் தோறும் சேகரிக்கும் தரவுகளுக்கமையவே ஒவ்வொரு மாவட்டங்களிலும் நாள்தோறும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மறுநாள் காலை தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணியால் வெளியிடப்படுகின்றது.
மாவட்ட செயலர் மற்றும் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோர் தனித்தனியே வெளியிடும் எண்ணிக்கையில் முரண்பாடு இருக்குமானால் அதற்கு நாம் பொறுப்பல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” – என்றார்.
இதேவேளை, வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் பெற்றுக்கொள்ளப்படும் பி.சி.ஆர். மாதிரிகளின் முடிவுகள் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.