சமூக வலைத்தளத்தில் போலிச் செய்தியை பரப்பிய குற்றச்சாட்டில் அரச ஊழியர் கைது!
சமூக வலைத்தளங்களில் மக்களைத் தவறாக வழிநடத்தும் போலிச் செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் அரச ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூலம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தின் கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அரச ஊழியரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனியார் இடம் ஒன்றில் வெட்டப்பட்ட காடுகளை, பெரும் காடழிப்பாகச் சித்தரித்து, பேஸ்புக் பக்கத்தில் பதிவுகள் பகிர்ந்துள்ளார் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர் கொத்மலை பிரதேச காணி நிர்வாக உதவி ஆணையாளராகச் செயற்பட்டு வந்தார் என்று பொலிஸார் கூறியுள்ளனர்
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.