‘போர்ட் சிட்டி’ சட்டமூலம் மீதான வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி! – விசாரணை நடத்த சபாநாயகர் தீர்மானம்.
கொழும்புத் துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகளை நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி விடுத்த கோரிக்கையைத் தொடர்தே, விசாரணை மேற்கொள்ள சபாநாயகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்புத் துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 148 வாக்குகள் அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது எனச் சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமக்கு 150 விசேட பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப் பெற்றன என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளதோடு, சபாநாயகரின் கவனத்துக்கும் கொண்டு வந்திருந்தது.
அதனைத் தொடர்ந்தே, வாக்குகளைக் கணக்கிடுவதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக, தொழில்நுட்ப அமைச்சின் நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், வாக்குகளைக்கணக்கிடும்போது நிர்வாக ரீதியில் தவறுகள் நிகழ்ந்துள்ளனவா என்பதை ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் மற்றுமொரு விசாரணையும் முன்னெடுக்கப்படவுள்ளது.