அல்வாய் படுகொலையுடன் தொடர்புடைய மூவர் கைது!

பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடுப்பட்டு வந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகி வசாவிளான் பாடசாலைக்கு அண்மையில் வசித்து வந்த நிலையில் இன்று கைதுசெய்யப்பட்டனர் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அல்வாயில் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி இரு பகுதியினருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகராசா கௌசிகன் (வயது – 31) என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
அல்வாய் வடக்கு முத்துமாரி அம்மன் கோவியிலடியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை வாய்த்தர்க்கமாக ஆரம்பித்து வாள் வெட்டில் முடிந்தது.
சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
சிகிச்சை பெற்றவர்களில் இருவர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர் என்ற குற்றச்சாட்டிலும், மேலும் இருவர் கொல்லப்பட்டவருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டிலும் பருத்தித்துறைப் பொலிஸாரால் மறுநாள் ஏப்ரல் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். மேலும், மூவர் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த மூவரும் வசாவிளான் பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டனர்.
20 மற்றும் 50 வயதுடைய பெண்கள் இருவரும், 56 வயதுடைய ஆண் ஒருவருமே இன்று கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மூவரும் விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.