புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை கொத்தணி: 4 கர்ப்பிணித்தாய்மாருக்குக் கொரோனா!
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலைக் கொரோனாக் கொத்தணியால் 4 கர்ப்பிணித் தாய்மார் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஆயிரத்து 424 பேரில் 365 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் கர்ப்பிணித் தாய்மார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் கொரோனா இடைத்தங்கல் நிலையத்திலும், இருவர் மாங்குளம் மருத்துவமனையிலும், ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 9 மாதங்கள் நிரம்பிய கர்ப்பிணித் தாய் ஒருவர் மருத்துவமனைக்கு நீண்ட இழுபறியின் பின்னரே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவர் வசிக்கும் இடம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு வாகன வசதிகள் எதுவும் இல்லாமல் திண்டாடிய நிலையில் நேற்றுக் காலை 5 மணிக்கே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.