காணாமல்போன 10 வயதுச் சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

புத்தளம் மாவட்டம், நவகத்தேகம, அத்துறுபாலயாகம பகுதியில் காணாமல்போனார் எனத் தெரிவிக்கப்பட்ட 10 வயது சிறுமி பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் தாயுடன் இருந்தபோது குறித்த சிறுமி காணாமல்போனார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, அயலவர்களுடன் இணைந்து அவரது பெற்றோர் சிறுமியைத் தேடியுள்ளனர். எனினும், சிறுமியைக் காணாத நிலையில், நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போதே அந்தப் பகுதியிலுள்ள தோட்டக் கிணறு ஒன்றுக்குள் சிறுமி சடலமாகக் காணப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.