கொரோனா இடரிலும் கொண்டாட்டம்!
தேசிய வெசாக் தின கொண்டாட்டங்கள் நயினாதீவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பெருந் தொற்றுக் காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனாலும், அதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முன்னெடுக்கப்படும் கண் சத்திர சிகிச்சை நிறுத்தப்படவில்லை.
இதற்கு பெருமளவானவர்கள் போதனா மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றார்கள். அநுராதபுரம், பொலநறுவையிலிருந்தும் மக்கள் அழைத்து வரப்படுகின்றார்கள்.
போதனா மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவருக்கும் அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே சிசிக்சைக்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால், கண் சத்திர சிகிச்சைக்கு வருபவர்கள் எவருக்கும் சோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. அத்துடன் ஒரே நேரத்தில் அதிகளவானோர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றார்கள். இதனால் மருத்துவமனையில் தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புக்கள் இந்தச் சத்திர சிகிச்சை ஊடாக ஏற்படும் என்று போதனா மருத்துவமனை மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தப் பெருந் தொற்றுக்குள் வெசாக்கை முன்னிட்டு போதனா மருத்துவமனையின் கண் மருத்துவ விடுதி அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.