அரசியல் கைதிகளின் விடுதலைக்காகத் தமிழ் எம்.பிக்கள் ஓரணியில் நிற்பது எமக்குச் சிற்றாறுதல்! – உறவுகள் அறிக்கையூடாகத் தெரிவிப்பு.
“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் கட்சி, கொள்கை பேதம் கடந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரச தரப்புடன் பேசியுள்ளமை எமக்கு ஒரு சிற்றாறுதலைத் தருகின்றது.”
இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் அறிக்கையூடாகத் தெரிவித்துள்ளனர்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசின் அயலுறவுத்துறை அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான தினேஷ் குணவர்த்தனவுடன் முதற்கட்ட பேச்சை மேற்கொண்டுள்ளார்கள். இதனை, சிறையில் வாடும் எமது உறவுகளின் விடயத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் எடுத்துள்ள ஆரோக்கியமான செயற்பாட்டின் ஆரம்பப் புள்ளியாகவே நாம் காண்கின்றோம். இதனை ஆதரவோடு வரவேற்கின்றோம்.
ஏனெனில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது ஆளும் அரசின் அரசியல் விருப்பத்திலேயே தங்கியுள்ளது. விடுதலையை வென்றெடுக்க வேண்டுமாயின் நாம் வேறெங்கும் பேசிப் பயனில்லை. காரணம், நாட்டின் சட்டம் மற்றும் நீதி எனும் காரணப்பெயருக்குள் கட்டுண்டவர்களாகக் கைதிகள் காணப்படுகிறார்கள்.
இவ்வாறு அணி சேர்ந்து மக்கள் பணியாற்றும் கைங்கரியமானது அரசுக்கும் இதர தரப்புகளுக்கு ஒருமித்த மக்களின் பலப் பிரயோகத்தையும் அவர்களின் விருப்பத்தையும் புரியவைப்பதாக அமையலாம். இத்தகைய பொதுமைப்பண்பின் மூலம் உடனடி அவசியப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டுமானால், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்காக நீண்டகால அரசியல் தீர்வும் இதே போன்று சாத்தியப்படலாம்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றார்கள். அதனை நாம் வரவேற்கின்றோம்; வலுப்படுத்துகின்றோம். மொத்தத்தில் அவை மக்களின் குரலே. அதன் அடிப்படையில் அரசியல் கைதிகள் விடயத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிகவும் காத்திரமானது. அவர்கள் மக்கள் ஆணையின் சிறப்புரிமைக்கமைய சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை நேரடியாகச் சந்தித்து ஆற்ற வேண்டிய கருமங்கள் தொடர்பில் அவதானிக்க முடியும். தவிர அரசின் துறை சார்ந்த அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாட முடியும். ஈற்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்தில் கைதிகளின் விடுதலைக்கான பொதுப்பொறிமுறை ஒன்றை முன்வைத்து பேச முடியும்.
நாடும் அரசம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை முழுமை பெறுமானால் அது அரசுக்குச் சாதகமான பலனையே தரும் என்பதில் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை. ஆகவே, அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்” – என்றுள்ளது.