கப்பல் தீ பரவல்? 25 பணியாளர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு.

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்துள்ள குறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்தநிலையில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) காலை முதல் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்திலேயே இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்காக வானூர்த்தி ஊடாக இராசயன பொருட்கள் தூவப்பட்டு வருகின்றன.
அத்துடன், கப்பலில் இருந்த 25 பணியாளர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்தியர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கப்பலில் இருந்த கொள்கலன்களில் எட்டு கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.