கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம்.
கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்களை தொட வேண்டாமென எச்சரிக்கை!
கொழும்பு மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் கடற்பரப்பில் ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நீர்கொழும்பில் கரையொதுங்கியுள்ள பொருட்கள் தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கசியும் இரசாயன திரவியங்களின் படிமங்களாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனவே கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும் அதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த கப்பலில் நேற்று (செவ்வாய்கிழமை) காலை முதல் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டிருந்ததுடன், இதனால் இருவர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்த கப்பலில் இருந்து 25 பணிக்குழாமினர் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டனர்.
தீயணைப்பு பணியில் இலங்கை கடற்படைக்கு மேலதிகமாக இந்தியாவினாலும் கப்பல்களும் விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.