‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கு பிறகு சில படங்களில் நடிக்கும் எண்ணம் இருக்கிறது.
‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கு பிறகு சில படங்களில் நடிக்கும்எண்ணம் இருக்கிறது. அதற்கெல்லாம் கடவுள்தான் மனது வைக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாகபடப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தின் காட்சிகள் தற்போது பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் கடந்த ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி, 30 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடித்து தனது பகுதியில் பெரும்பாலான காட்சிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி.
கொரோனா விதிமுறைகள் காரணமாக, ரஜினிகாந்த் நடித்த சண்டைக்காட்சிகள் உட்பட பெரும்பாலானகாட்சிகள் சமூக இடைவெளியைபின்பற்றியே படமாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வசதிகளால் அவற்றை சரிசெய்து கொள்ளலாம் என இயக்குநர் சிவா திட்டமிட்டிருக்கிறார். ரஜினியின் 2 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே இன்னும் பாக்கி உள்ளன.
கொரோனா பரவல் குறைந்து, உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய பிறகே அந்த காட்சிகளை முடித்துக் கொடுக்கும் எண்ணத்தில் ரஜினி உள்ளார். இதற்கிடையே, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் அவருக்கு அடுத்தடுத்த கதைகள் தயார் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாட்களில் படக்குழுவினரிடம் ரஜினி பேசிய உருக்கமான உரையாடல் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:
மேலும் ஒருசில படங்களில் நடிக்கும் ஆசை உள்ளது. தற்போது நிலவும் இந்த கரோனா தொற்று முடிவுக்கு வந்ததும்தான் அந்த எண்ணத்தை சாத்தியப்படுத்த முடியும். எனது உடல்நிலையும் அதுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இதற்கெல்லாம் கடவுள்தான் மனது வைக்க வேண்டும். ‘அண்ணாத்த’ திரைப்படம் நல்லபடியாக நிறைவுப் பகுதியை எட்டியதில் எனக்கு மகிழ்ச்சி. எல்லோரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். குடும்பத்தினரையும் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.