கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் தீ!
கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் திக்குமுக்காடும் இலங்கை – இந்தியப் படைகள்
கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டு இருந்த கப்பலில் ஏற்பட்ட தீ, கப்பல் முழுவதும் பரவியுள்ளது எனக் கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலுக்கு அருகில் தீ அணைப்பு நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியாத அளவுக்கு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
குறித்த கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து 9.5 கடல் மைல் தூரத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து தீ அணைப்பு கப்பல்கள் உதவிக்கு வந்துள்ள நிலையில், அவையும் கப்பலுக்கு நெருங்கிச் செல்ல முடியாமல் நங்கூரமிடப்பட்டுள்ளன.
தீப்பரவல் காரணமாக கப்பலில் இருந்த பல கொள்கலன்களும் கடலுக்குள் விழுந்துள்ளன.
கடலுக்குள் விழுந்த கொள்கலன்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளன.
குறித்த கொள்கலன்களில் நச்சுப் பொருட்கள் இருக்கின்றன எனவும், அருகில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், பிரதேச மக்கள் கொள்கலன்களில் இருந்த பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
கப்பலின் கொள்கலன்களில் தோல் நோய் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய நச்சு, இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன என்று கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.