யாழில் இன்று ‘ட்ரோன்’ கமரா கண்காணிப்பில் 10 பேர் கைது விமானப் படையினருடன் இணைந்து பொலிஸார் அதிரடி.
யாழ்ப்பாணத்தில் விமானப் படையின் உதவியுடன் இன்று ஆரம்பிக்கப்பட்ட ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்று யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
யாழ். மாநகரம், நல்லூர், அரியாலை மற்றும் குருநகர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கமரா கண்காணிப்பு நடவடிக்கைகளின்போதே குறித்த சந்தேகநபர்கள் சிக்கினார்கள் எனவும் அவர் கூறினார்.
அவர்களில் சிலர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், ஏனையோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
விமானப் படையின் உதவியுடன் பயணத் தடை காலப்பகுதியில் ட்ரோன் கமராவின் உதவியுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் பணி கடந்த ஒரு வாரமாக தெற்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் இந்தக் கண்காணிப்புப் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இன்று பகல் முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பின்போதே 10 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.