எம்.டியின் நாலுகெட்டு-புத்தக விமர்சனம்!

நாலுகெட்டு எம்.டி வாசு தேவன் நாயரின் சாகித்ய விருது பெற்ற மலையாள நாவல் ஆகும். முதல் பிரசுரம் 1958ல் வெளிவந்தது.
இந்திய எழுத்தாளர்களில் மிகவும் மதிக்கப்படும் ஒருவரான எம். டி. வாசுதேவன் நாயர், ஆகஸ்ட் 15, 1934 அன்று கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கூடலூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
 தனது நன்கு வடிவமைக்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலம் மலையாளத்தில் சிறந்து விளங்கினார். மென்மையான காதல் மற்றும் மனிதனின் சூழலால் விளைந்த இயலாமை, துன்பம் அதன் உணர்ச்சி தீவிரம் மற்றும் அன்பின் கணங்களை  சித்தரிப்பது வழியாக வாசகர்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டனர்.  தனது பல நாவல்களில் கேரளாவில் நிலப்பிரபுத்துவத்தை நுட்பமாக தனது எழுத்து ஊடாக எதிர்ப்பவராக இருந்துள்ளார்.
ஒரு மாஸ்டர் கதைசொல்லியான எம்.டி., 1995 ஆம் ஆண்டில் ஒரு எழுத்தாளரான மிக உயர்ந்த இலக்கிய விருது ஞானபீட புரஸ்காரத்தால் கவுரவிக்கப்பட்டார். அதற்கு முன்பு, அவர் கேரள மாநில மற்றும் மத்திய அரசின் சாகித்ய அகாடமி போன்ற பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
 
கேரள சாகித்ய அகாடமியின் தலைவர் பதவி மற்றும் துஞ்சன் மெமோரியல் டிரஸ்டின் தலைவர் உட்பட பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பல முக்கியமான பதவிகளை அலங்கரித்துள்ளார்.   இவரது படைப்புகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளனர். கேரளாவின் மிகவும் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பிரதான சினிமா இயக்குனர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
 
இந்த நாவலிலும் பிரதான கதாப்பாத்திரம் அப்புண்ணி என்ற சிறுவன்.   தனது தகப்பனை மூன்று வயதிலே இழந்து விடும் அப்பூ, தனது தாய் பாராமரிப்பில் ஏழ்மை நிலையில் வளர்ந்து வருகிறான். தாய் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். காதலித்து திருமணம் செய்தார் என்ற காரணத்திற்காக தங்கள் குடும்பத்தில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டவர். பெரிய குடும்பத்தில் வளர்ந்த பெண், தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அந்த ஊர் பணக்கார வீட்டில் வேலைக்காரியாக வேலை பார்த்து வருவார்.
பணக்காரக் குடும்பம், பாரம்பரியம், ஜாதி என்று மேட்டிமை பாராட்டும் ஆட்களின் வீட்டின் அகத்திலுள்ள பிரச்சினைகளையும் அங்கு நடக்கும் போராட்டங்கள், போட்டி பொறாமைகள், பாலியல் அத்து மீறல்கள் மற்றும் அவர்களின் அநியாயமான வாழ்க்கை முறை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார்.

இத்தருணத்தில் சங்கரன் என்ற ஒருவரின் உதவிகளை தாய் பெற்று வருவார். இது மகனுக்கு பிடிக்காது . தாயை வெறுத்து தன் தாயின் குடும்ப வீட்டில் இருந்து கல்வி கற்று கொண்டு இருப்பான். சூழலுக்கும் இயலாமைக்கும் மத்தியில் தாய்மை   அல்லல்ப்படும் நிலை, தன் தகப்பனை கொன்றவனைக்கூட மன்னித்த மகனால் தன் தாயை ஏற்று கொள்ள இயlஅவில்லை. ஓரிரு நாட்கள் தன்னுடன் சல்லபித்த பெண்ணை நினைத்து உருகுவான். ஆனால் தன் தாய் இன்னொரு உறவை நாடுகிறார் என்றதும் மன்னிக்க இயலாத குற்றவாளியாகி  விடுகிறாள்.
ஒரு குழந்தை தன் பால்ய வயதில் வெறுப்பின், ஒதுக்குதலில், கேலி கிண்டல் பேச்சுக்கு மத்தியில் வளந்ததால், பிற்பாடுள்ள வாழ்க்கையிலும் தன்னை நேசிப்பவர்களை புரிந்து கொள்ள இயலாது; எல்லோரிடமும் வன்மம் கொண்ட மனிதராக மாறியிருப்பான் அப்புண்ணி.. மாளுட்டி அன்பாக ஒவ்வொரு முறை வரும் போதும் தெரிந்தே ஒதுக்கும் கல் நெஞ்சக்காரனாக இருப்பான் அப்பூ.
10 ஆம் வகுப்பு முடிந்ததும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் நல்ல வேலை கிடைக்கிறது.  பல வருடங்கள் கடந்த நிலையில் மறுபடி சொந்த ஊருக்கு வரும் போது தன் தாயின் குடும்ப ஆட்கள் வறிய நிலைக்கு ஆளாகியிருப்பதை அறிவான்.  தன் தாயின் இயலாமையை உணர்ந்து, தன் தாயை ஏற்று கொள்வதுடன்,  தங்கள் தாயின் பூர்வீக வீட்டை அப்புண்ணி வாங்கி, தன் தாய் மற்றும் தனது இரண்டாம் தகப்பனாருடன் வீட்டில் குடிபுகிர்வதுடன் கதை முடிகிறது.  நாலுகெட்டு என்ற கேரளப்பாணி பிரமாண்ட குடும்ப வீட்டை உடைத்து நமக்கான சிறு வீட்டு கட்டலாம் என்று தாயிடம் தெரிவிப்பான்.  வஞ்சகத்தின் பழைய நினைவுகளை அழித்து புது மனிதனாக உருமாறியிருப்பான் இளைஞர் அப்புண்ணி.

Leave A Reply

Your email address will not be published.