காரைநகரில் பனை மரம் விழுந்து காயமடைந்த சிறுமியின் வீட்டுக்கு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விஜயம்.

காற்றினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நேரடி விஜயம் மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்து கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு சுயதொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரடியாகச் சென்று பாதிப்பு தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றார்கள்.
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் .சூரியராஜ் தலைமையில் யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் நேற்றைய தினம் காரைநகர் பகுதியில் காற்றின் தாக்கத்தினால் பனைமரம் முறிந்து வீட்டின் மேல் விழுந்ததால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் வீட்டுக்கு விஜயம் மேற்கொண்டு சேதமடைந்த வீட்டுக்கு தற்காலிக கூரை விரிப்பினை வழங்கி வைத்ததோடு
பாதிப்புக்குரிய நஷ்ட ஈட்டை வழங்குவதற்கான விபரங்களையும் சேகரித்துள்ளனர்.