பருத்தித்துறை – ஓடக்கரையில் 15 பேருக்கு இன்று கொரோனா! – வடக்கில் மேலும் 111 பேருக்குத் தொற்று.
பருத்தித்துறை, ஓடக்கரை பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் ஓடக்கரைக் கிராமத்தில் 37 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது.
அவர்களில் 15 பேருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓடக்கரைக் கிராமத்தில் அண்மைய நாள்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் இந்த விசேட பரிசோதனை அங்கு இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் நேற்று 111 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணி இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் 39 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 36 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பேரும், வவுனியா மாவட்டத்தில் 14 பேரும், மன்னார் மாவட்டத்தில் 12 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் 04ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையான காலப் பகுதியில் வடக்கு மாகாணத்தில் 5 ஆயிரத்து 948 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தேசிய கொரோனா தடுப்புச் செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.