வர்த்தக நிலையங்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது.
அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது
நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யவுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
அதன்படி இவ்வாறான முறைப்பாடுகளை பொதுமக்கள் 1977 என்ற அவசர எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்து பதிவுசெய்ய முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகும் காலப்பகுதியில் கிராம சேவகர் பிரிவொன்றில் தலா 2 வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் கிராம சேவகர் பிரிவொன்றில், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் இரண்டு வர்த்தக நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தொலைபேசி மற்றும் இனைய வழியிலான பதிவுகளின் மூலம், விசேட அனுமதிப்பத்திரத்துடன் வாகனங்களில் உணவு வகைகளை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வர்த்தகர்கள் அதிக விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அந்நிலையில் 25 மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் குறித்து, நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்து, வேறு வர்த்தக நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.