ஒன்ஸ் அகெய்ன்(Once Again)-திரைப்பட விமர்சனம்
மனைவியை இழந்த ஒரு நடுத்தர வர்க்க மனிதர் சஜ்ஜன் பெர்னாண்டஸ் (இர்பான் கான்) உடனான இலா (நிம்ரத் கவுர்) வின் காதலை சொல்லிய கதை ”தி லஞ்சு போக்ஸ்”. https://www.ceylonmirror.net/40318.html
அதன் தொடர்ச்சி போன்று இரண்டு நடுத்தர வயது மனிதர்களின் பிரிவு, விரக்தி, ஏங்குதல், வாழ்க்கையின் மூச்சுத் திணறலில் இருந்து ஆறுதலான கசப்பைக் கண்டுகொண்ட இரு மனிதர்களின் கதையை, இந்தியா பிறப்பிடமாக கொண்ட ஜேர்மன் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கன்வால் சேதி எழுதி 2018ல் வெளிவந்த திரைப்படம் ”ஒன்ஸ் அகெய்ன்”.
தாரா, கணவரை இழந்த ஒரு பெண், தனது மகனின் உதவியுடன் ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார். தனது குழந்தைகளின் நலனைக்கருதி கவுரமாக உழைத்து கட்டுகோப்பாக வாழ்ந்து வருகிறவர். விவாகரத்து செய்யப்பட்ட ஒரு வயதான நடிகர் அமர், 15 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கனவுகளின் நகரம் மும்பையில் தனியாக வசிக்கும் ஒரு செல்வந்தர். மற்றும் பிரபலமான திரைப்பட நட்சத்திரம்.தாரா அமரைப் பார்த்ததில்லை; ஆனால் தாராவின் உணவகத்தில் இருந்து தினம் அமருக்கு உணவு சென்று கொண்டு இருக்கிறது. எதிர்பாராத விதமாக ஆரம்பித்த அவர்கள் தொலைபேசி உரையாடல்கள், ஒருவருக்கொருவர் மணிநேரங்களுக்கு பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர்கிறது.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, அவர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்கிறார்கள். அவர்களின் காதல் வெளி உலகிற்கு தெரிய வருகிறது. இது தாராவின் மகனான தேவிற்கு பெரிய அவமானமாக உள்ளது. தாயின் தவறான நடத்தையாக எடுத்துக் கொள்கிறார். தாயும் மகனுக்குமான உறவு முற்றிலும் முறிந்து விட்டது. தான் எதிர்பார்த்த விடயம் முடிந்ததும், ஒரு கட்டத்தில் தாராவுடனான உறவு அமருக்கு தன் புகழுக்கான இழுக்கு என நினைக்க ஆரம்பிக்கிறார். தூய காதலுக்காக எதையும் இழக்க தயாராக இருந்த தாரா உடைந்து போகிறார். ஒரு பக்கம் தான் நேசித்து பாசம் காட்டி வளர்த்த மகன் வெறுக்கிறார். அடுத்தோ மோகம் கொண்டு வீழ்த்தி விட்டு இனி தாராவில் இருந்து தப்பித்து போக முயலும் காதலன் அமர்.
தாராவாக ஷெபாலி ஷா மற்றும் அமராக நீரஜ் கபி ஆகியோர் கதாபாத்திரங்களாக உண்மையில் வாழ்ந்திருக்கிறார்கள். இரண்டு அற்புதமான நடிகர்களின் கைகளில் கிடைத்த ஒரு நுட்பமான கதை. ஒவ்வொரு சட்டகத்திலும் அவர்களின் இயல்பான நடிப்பு அவர்களின் திறமையை நிரூபிக்கிறது. தாராவின் பெரிய அழகான கண்கள் அன்பைப் போலவே கோபத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் அத்தனை சிறப்பு.
படத்தில் எல்லா நேரத்திலும் இசை இல்லை, பெரும்பாலும் மவுனத்தை நம்பியுள்ளதும் சிறப்பாக உள்ளது. திரை வசனங்களும் மிகக்குறைவு, அர்த்தச்செறிவான சிறு உரையாடல்களுடன் கதை இதமாக நகர்கிறது. இது யதார்த்த சினிமாவின் கூறுகள் அடங்கிய ஒரு திரைப்படம். சிறந்த கேமரா வேலை: மும்பை இரவுகள் அழகாக பிடிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பரந்த காட்சிகள் பான் ஷாட்களூடாகவும், இரவில் தெருக்களில் சலசலப்பு, ஷெபாலியின் உணவக சமையலின் காட்சிகள் படத்தின் சிறந்த தருணங்கள். மிகவும் அமைதியான மனநிலையில் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. கதாபாத்திரங்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல்கள் சிறப்பாக செய்யப்பட்டன. வித்தியாசமான நடனம் மாண்டேஜ்களை உள்ளடங்கிய திரைப்படம் இது. எடிட்டிங்கில் மற்றும் நடன அசைவுகளில் இன்னும் கூர்மையை கடைபிடித்து இருக்கலாம். இந்த படத்தில் காட்டப்படும் ஆழ்ந்த காதலின் காட்சிகள், சில தருணங்களில் பார்வையாளர்களை பேச்சில்லாமல் செய்து விடுகிறது.
தனிமையின் கருப்பொருளைக் கொண்ட படமாக இருந்தாலும் படத்தின் முடிவில் அமர் தாராவை தேடி வந்தாலும் கெஞ்சி கேட்டுகொண்டாலும், நட்பை பேணிக்கொண்டு அவரவர் விருப்பங்களுடன் தனித்து பயணிப்பதே சிறப்பு என முடிவெடுத்தது படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. அமருடனான ஒரு சாதாரண உரையாடலில், கடலை பயப்படுவதாகக் குறிப்பிடும் தாரா, முடிவில் கடல் பயணம் மேற்கொள்வது போலவும் காட்டப்பட்டுள்ளது. அமர் எப்போதும் தான் வெல்ல வேண்டிய உயரங்களை பார்ப்பவர். சுய நல விரும்பியும் கூட! ஒரே நேரத்தில் நல்லவராகும் கொடியவராக தோன்றும் கதாப்பாத்திரம்.
தாரா, ஆழமான அன்பிற்கும் நேசத்திற்கும் மதிப்புக் கொடுத்து எங்கும் தங்கள் மரியாதையை இழக்காத வண்ணம், இனி ஒன்று சேர வேண்டாம் என முடிவெடுப்பது பெண்மையில் ஆளுமையை மிளிரச்செய்கிறது. பெண்கள் பணத்திற்காகவோ, உணர்விற்காகவோ ஒரு போதும் மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது என்று சொல்லிய படமிது. வயதான காதலை பற்றிய அழகான சித்தரிப்பு கொண்ட இத்திரைப்படத்தை முழுமையாக ரசிக்கலாம். காதலில் வலிமை, பலவீனம், அன்பு மற்றும் மன்னிப்பும் உள்ளது என்று சொல்லிய திரைப்படம் இது.