யாழ். வருகின்றார் நாமல்; நாளை தொடக்கம் தடுப்பூசி.
யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை 61கிராம அலுவலர் பிரிவுகளில் நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழ். வருகின்றார்.
கொரோனாத் நோய்த் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்படும் இடங்களுக்குத் தடுப்பூசி மருந்து வழங்கலில் முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாளை காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது என மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற தடுப்பூசி வழங்கும் செயற்பாடு தொடர்பான முன்னேற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. காலை 8 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை ஒரு அமர்வும், அதன் பின்னர் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை இன்னொரு அமர்வும் நடைபெறவுள்ளது.
அதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு மாத்திரம் அந்த இடங்களுக்கு வருகை தந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு கிராம அலுவலர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களால் தங்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என உறுதிப்படுத்தினால் மாத்திரமே தடுப்பூசி வழங்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.
எனவே, நீங்கள் தேவையில்லாது அலையாது தங்களுக்குரிய வழிகாட்டல் கிடைத்த பின்னர் தடுப்பூசி வழங்கும் இடத்துக்குச் செல்ல முடியும்” – என்றார்.
கொரோனாத் தடுப்பூசி ஏற்றலுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை வருமாறு:-
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவின் கீழ் ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 16 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 13 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 5 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 4 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 5 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 10 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 3 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் 2 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் நாளை கொரோனாத் தடுப்பூசி முதற்கட்டமாக ஏற்றப்படவுள்ளது.